கவுன்சிலர்களுக்கு சொத்து வரி நிர்ணயிப்பதில்.. . தில்லு முல்லு அம்பலமானதால் சுதாரித்து கமிஷனர் மறு நிர்ணயம்
காஞ்சிபுரம் காஞ்சிபுரம் மாநகராட்சி கவுன்சிலர்களுக்கு சொத்து வரி நிர்ணயிப்பதில் நடந்த தில்லுமுல்லு குறித்து, நம் நாளிதழில் செய்தி வெளியானது. கவுன்சிலர்கள் பலர் சொத்து வரியாக சொற்ப தொகையை கட்டி வந்தது பகிரங்கமானதை அடுத்து, கவுன்சிலர்களுக்கான சொத்து வரியை மறு நிர்ணயம் செய்ய, மாநகராட்சி கமிஷனர் உத்தரவிட்டுள்ளார்.
காஞ்சிபுரம் மாநகராட்சியில், குடியிருப்புகள், வணிக வளாகம் என 32,000க்கும் அதிகமான கட்டடங்கள் உள்ளன. மாநகராட்சிக்கு, சொத்து வரி வாயிலாக மட்டும் ஆண்டுக்கு 29 கோடி ரூபாய் வருவாயாக கிடைக்கிறது.
ஆனால், கட்டடங்கள் மீதான வரியை ஆய்வு செய்யவோ, மறுநிர்ணயம் செய்யவோ தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ள, மேயர் மகாலட்சுமி தலைமையிலான மாநகராட்சி நிர்வாகம் அலட்சியம் காட்டி வருகிறது.
அதனால், பல வணிக கட்டடங்களுக்கு குறைவான வரியை செலுத்தி, வரி ஏற்பு செய்து வருவது குறித்து, மாநகராட்சி கூட்டத்தில் ஆளுங்கட்சி மற்றும் எதிர்க்கட்சி கவுன்சிலர்கள் தொடர்ந்து குற்றம் சாட்டி வருகின்றனர்.
அதே போல, மாநகராட்சி கவுன்சிலர்கள் பலர், தங்கள் வீடுகளுக்கான சொத்து வரியை குறைத்து கட்டி வருவதாகவும், ஏராளமான புகார்கள் எழுந்தன.
இது தொடர்பாக, ‘தினமலர்’ நாளிதழில் டீக்கடை பெஞ்ச் பகுதியில், கவுன்சிலர் ஒருவரின் சொத்து வரியாக வெறும் 211 ரூபாய் மட்டுமே விதிக்கப்பட்டு இருப்பதாக,
செய்தி வெளியானது.
தொடர்ந்து, மாநகராட்சி அதிகாரிகள், வீட்டு சொத்து வரி ரசீதுகளை ஆய்வு செய்ததில், ஏராளமான கவுன்சிலர்கள் 100, 400, 500 ரூபாய் என குறைவான தொகையில் வரி கட்டியிருப்பது தெரியவந்தது.
இந்த விவகாரம், காஞ்சிபுரம் நகரவாசிகள் மற்றும் பொதுமக்களிடையே கடும் அதிருப்தியை கிளப்பியது.
கவுன்சிலர்களுக்காக, இந்த நுாதன செயலில் மாநகராட்சி ஈடுபட்டு வந்த நிலையில், தற்போது குட்டு அம்பலமானதால் திடீரென சுதாரித்துக்கொண்டது.
இதனால், காஞ்சிபுரம் மாநகராட்சி கமிஷனர் நவேந்திரன், மாநகராட்சியின் 51 கவுன்சிலர்களுக்கும், வருவாய் துறை சார்பில், சொத்து வரி நிர்ணயம் தொடர்பாக கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளார்.
அதில் கூறியிருப்பதாவது:
தினமலர் நாளிதழில் வெளியான செய்தி தொடர்பாக, காஞ்சிபுரம் மாநகராட்சியின் அனைத்து கவுன்சிலர்களும், தங்களது பெயரில் உள்ள சொத்துக்களுக்கு உரிய வரி செலுத்த வேண்டும்.
எனவே, கவுன்சிலர்கள் தங்களது பெயரில் உள்ள கட்டடங்களுக்கு, சொத்து வரியை, இணைப்பில் கொடுக்கப்பட்டுள்ள படிவத்தில் ஏழு நாட்களுக்குள் பூர்த்தி செய்து வழங்க வேண்டும்.
தவறும்பட்சத்தில், கட்டடத்தை மறு அளவீடு செய்து, சொத்துவரி மறுநிர்ணயம் செய்யப்படும்.
கவுன்சிலர்கள் பலருக்கும், இந்த கடிதம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சொத்துவரி மறுநிர்ணயம் சம்பந்தமாக கமிஷனர் வழங்கிய கடிதத்தால், பலர் கவுன்சிலர்கள் அதிருப்தி அடைந்துள்ளனர்.
பேனர் பாக்ஸ்
சொத்து வரி நிர்ணயம்
காஞ்சிபுரம் மாநகராட்சியில் ஏ, பி, சி என, மூன்று வகையான குடியிருப்பு பகுதிகள் உள்ளன. குடியிருப்புக்கு பகுதிக்கு ஏற்ப சொத்து வரி வித்தியாசப்படுகிறது. மேலும், கூரை, தகரத்தால் ஆன ஷீட், கான்கிரீட் வீடு என, மூன்று வகையான வீடுகள், குடியிருப்பு பகுதியை கணக்கிட்டு வரி விதிக்கப்படுகிறது. அடிப்படை சொத்து வரியுடன், 2022ல் உயர்த்தப்பட்ட சொத்து வரியையும் கணக்கிட்டு, இப்போது வரி விதிக்கப்படுகிறது.ஏ வகை குடியிருப்பு கட்டடத்திற்கு, 1 சதுர அடிக்கு 3.92 ரூபாய், வணிக கட்டடத்திற்கு 24 ரூபாய் வசூலிக்கப்படுகிறது. பி வகை குடியிருப்பு கட்டடத்திற்கு 1 சதுர அடிக்கு 2.56 ரூபாயும், வணிக கட்டடத்திற்கு 16 ரூபாய், சி வகை குடியிருப்பு கட்டடத்திற்கு 1 சதுரடிக்கு 1.92 ரூபாய், வணிக கட்டடத்திற்கு 11 ரூபாயும் வசூலிக்கப்படுகிறது.உதாரணமாக, 100 சதுர அடியில் கூலி தொழிலாளி ஒருவர், ‘ஏ’ வகை பிரிவில் வீடு கட்டியிருந்தால் 392 ரூபாயும், அதனுடன் உயர்த்தப்பட்ட வரி 98 ரூபாய் சேர்த்தால், மொத்தம் 490 ரூபாய் செலுத்த வேண்டும். ஒரு கூலி தொழிலாளி தன் வீட்டுக்கு ஆறு மாதங்களுக்கு ஒரு முறை 490 ரூபாய் கட்டும் நிலையில், ஏராளமான கவுன்சிலர்கள் 1,000 சதுர அடிக்கு மேல் உள்ள வீட்டுக்கு, வெறும் 1,000 ரூபாய்க்குள்ளாக வரி செலுத்தியுள்ளனர்.