மின் இணைப்புக்கு லஞ்சம் ஊழியருக்கு 5 ஆண்டு சிறை
சென்னை:பெரம்பூரைச் சேர்ந்தவர் பெலிக்ஸ். இவர், தன் வீட்டிற்கு மும்முனை மின் இணைப்பு கேட்டு, கடந்த 2013ம் ஆண்டு ஜூலை 3ம் தேதி, ஓட்டேரி மின் வாரிய அலுவலகத்தில் விண்ணப்பித்துள்ளார்.
இவரது விண்ணப்பத்தை பரிசீலித்து மும்முனை மின் இணைப்பு வழங்க, அப்போது பணியில் இருந்த உதவி பொறியாளர் கலைச்செல்வன், 36, என்பவர் 20,000 ரூபாய் லஞ்சம் கேட்டுள்ளார்.
இது குறித்து, பெலிக்ஸ் சென்னை லஞ்ச ஒழிப்பு போலீசில் புகார் செய்தார். கடந்த 2013ல் ஜூலை 6ம் தேதி, பெலிக்ஸிடம் இருந்து பணத்தை வாங்கும்போது, போலீசார் கலைச்செல்வனை கையும் களவுமாக பிடித்து, கைது செய்தனர்.
இந்த வழக்கு விசாரணை, சென்னையில் உள்ள லஞ்ச ஒழிப்பு வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்ற நீதிபதி எஸ்.பிரியா முன் நடந்தது.
போலீசார் தரப்பில் அரசு சிறப்பு வழக்கறிஞர் உஷாராணி ஆஜரானார். வழக்கை விசாரித்த நீதிபதி, கலைச்செல்வன் மீதான குற்றச்சாட்டுகள் சந்தேகத்துக்கு இடமின்றி, அரசு தரப்பால் நிரூபிக்கப்பட்டு உள்ளது எனக் கூறி, அவருக்கு ஐந்து ஆண்டு கடுங்காவல் சிறை தண்டனையும், ஒரு லட்சம் ரூபாய் அபராதமும் விதித்து தீர்ப்பளித்தார்.