கச்சாலீஸ்வரர் கோவிலுக்கு பூஜை பொருள் தினமும் வழங்க நகரத்தாருக்கு அனுமதி
சென்னை, காசியில் நடப்பதுபோல, மயிலாப்பூர் கச்சாலீஸ்வரர் கோவிலுக்கு, தினமும் ஒரு கால பூஜை பொருட்கள் வழங்க, ஸ்ரீகாசி நாட்டுக்கோட்டை நகர சத்திர மேலாண்மை கழகத்திற்கு, கோவில் நிர்வாகம் அனுமதி அளித்துள்ளது. இன்று முதல் அதற்கான ஊர்வலம் நடக்க உள்ளது.
ஸ்ரீகாசி நாட்டுக்கோட்டை நகர சத்திர மேலாண்மை கழக இணைச் செயலர் ராமநாதன் கூறியது:
உத்தரப்பிரதேசம் மாநிலம், வாரணாசியில், நாட்டுக்கோட்டை நகர சத்திரம் உள்ளது. கடந்த 200 ஆண்டுகளுக்கும் மேலாக அங்கிருந்து, காசி ஸ்ரீவிஸ்வநாதர் கோவிலுக்கு தினமும் பூஜை பொருட்கள், மேளதாளத்துடன் கொண்டுச் செல்லப்படுகின்றன.
‘சம்போ’ என்ற இந்த ஊர்வலம் செல்லும்போது காசி நகர மக்களும், வியாபாரிகளும் எழுந்து நின்று மரியாதை செய்வார்கள்.
அதுபோல, சென்னை மண்ணடி, அரண்மனைகாரன் தெருவில் உள்ள கச்சாலீஸ்வரர் கோவிலுக்கு, தினமும் ஒரு கால பூஜைக்குரிய பொருட்களை வழங்க, ஸ்ரீகாசி நாட்டுக்கோட்டை நகர சத்திர மேலாண்மை கழகத்திற்கு, கோவில் நிர்வாகம் அனுமதி வழங்கியுள்ளது.
எனவே, மண்ணடியில் உள்ள ரங்கோன் நகர விடுதி சத்திரத்தில் இருந்து, இன்று முதல் தினமும் மாலை 6:30 மணிக்கு, காசியில் நடப்பது போல மேளதாளத்துடன், கச்சாலீஸ்வரர் கோவிலுக்கு பூஜை பொருட்கள் கொண்டு செல்லப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.