திரு முல்லை வாயிலில் புழுதி பறந்த சாலைக்கு 33 மாதத்திற்கு பின் விடிவு.
ஆவடி, ஆவடி, பட்டாபிராம் அடுத்த சேக்காடு துணை மின் வாரிய நிலையத்தை ஒட்டியுள்ள 150 மீட்டர் கோபாலபுரம் பிரதான சாலை, போக்குவரத்திற்கு லாயக்கற்ற நிலையில் இருந்தது.
இதுகுறித்த புகாரையடுத்து, ஆறு மாதங்களுக்கு முன் 100 மீட்டர் சாலை போடப்பட்டது. மீதமுள்ள 50 மீட்டர் சாலை பல மாதங்களாக குண்டும், குழியுமாக காட்சியளித்தது. இதனால் வாகன ஓட்டிகள் பள்ளத்தில் தடுமாறி விழுந்து விபத்தில் சிக்கி காயமடைந்தனர்.
இது குறித்து, கடந்த மாதம் நம் நாளிதழில் படத்துடன் செய்தி வெளியானது. அதன் எதிரொலியாக நேற்று முன்தினம் இரவு, விடுபட்ட பகுதியில் தார் சாலை போடப்பட்டது.
ஆவடி அடுத்த திருமுல்லைவாயில், சரஸ்வதி நகர் ஏழாவது தெருவில் 25க்கும் மேற்பட்ட வீடுகள் உள்ளன.
ஐந்து ஆண்டுகளுக்கு முன் அமைக்கப்பட்ட தார் சாலை, வாகன போக்குவரத்து காரணமாக குண்டும் குழியுமாக மாறியது.
இதை சீரமைக்க இரு ஆண்டுகளுக்கு முன், ஜல்லிக்கற்கள் கொட்டப்பட்டன. ஆனால் உடனே சாலை அமைக்காததால், ஜல்லி மாயமானது.
கடந்த 33 மாதங்களாக பணி கிடப்பில் போட்டதால், வாகனங்கள் செல்லும் போது புழுதி பறந்து, அனைவருக்கும் சிரமத்தை ஏற்படுத்துகிறது என, நம் நாளிதழில் செய்தி வெளியானது. அதன் எதிரொலியாக, இரு தினங்களுக்கு முன் தார் சாலை போடப்பட்டுள்ளது.