வன்முறையில் ஈடுபட்ட 31 மாணவர்கள் மீது நடவடிக்கை: ரயில்வே போலீஸ் பரிந்துரை

சென்னை, மின்சார ரயில், ரயில் நிலையங்களில் வன்முறையில் ஈடுபட்ட, இரு கல்லுாரிகளை சேர்ந்த 31 மாணவர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்க, ரயில்வே போலீஸ் பரிந்துரை செய்துள்ளது.

சென்னையில் இருந்து தாம்பரம், செங்கல்பட்டு, திருவள்ளூர், அரக்கோணம், கும்மிடிப்பூண்டி தடங்களில் தினமும் 450க்கும் மேற்பட்ட மின்சார ரயில்கள் இயக்கப்படுகின்றன.

காலை மற்றும் மாலை நேரங்களில் கல்லுாரி மாணவர்கள் செல்லும்போது, அவர்களுக்குள் மோதல் நடப்பது அதிகரித்து வருகிறது.

குறிப்பாக, சென்ட்ரல், கடற்கரை, பேசின்பிரிட்ஜ், கொருக்குப்பேட்டை, தண்டையார்பேட்டை, பெரம்பூர், கிண்டி, சைதாப்பேட்டை, திருமுல்லைவாயல் உள்ளிட்ட ரயில் நிலையங்களில் கல்லுாரி மாணவர்கள் மோதலில் ஈடுபட்டு வருகின்றனர்.

பயணியர் பாதுகாப்பு மற்றும் மாணவர்கள் மோதலை தடுக்கும் வகையில், மின்சார ரயில்கள், ரயில் நிலையங்களில் ரயில்வே போலீஸ் மற்றும் ரயில்வே பாதுகாப்பு படை இணைந்து, கண்காணிப்பு பணியில் ஈடுப்பட்டு வருகின்றனர்.

இது குறித்து, ரயில்வே போலீஸ் அதிகாரிகள் கூறியதாவது:

கல்லுாரி மாணவர்களில் ஒரு சிலர் குழுவாக சென்று, பயணிக்கும்போது, விதி மீறல்களில் ஈடுபடுகின்றனர். சில நேரங்களில் கற்கள் மற்றும் ஆயுதங்களால் தாக்கி கொள்கின்றனர்.

இதை தவிர்க்க கோரி, பல முறை எச்சரிக்கை விடுத்து அனுப்பி உள்ளோம். ஆனால், தொடர்ந்து வன்முறையில் ஈடுபடும் சில மாணவர்களை கைது செய்து வருகிறோம்.

சமீபத்தில் வன்முறையில் ஈடுபட்ட பச்சையப்பன் கல்லுாரியை சேர்ந்த 17 மாணவர்கள், மாநில கல்லுாரியை சேர்ந்த 14 மாணவர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்க கோரி கல்லுாரிகளின் நிர்வாகத்துக்கு பரிந்துரை செய்துள்ளோம்.

கல்லுாரி மற்றும் மாணவர்கள் பெயர்கள், வன்முறையில் ஈடுபட்டதற்கான ஆதாரங்களையும் அளித்துள்ளோம். இதன்பேரில், உயர் கல்வித்துறை சம்பந்தப்பட்ட மாணவர்கள் மீது சஸ்பெண்ட் போன்ற நடவடிக்கை எடுக்கும் என எதிர்பார்க்கிறோம்.

இவ்வாறு அவர்கள் கூறினர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *