எந்த பணியும் செய்யாமல் எப்படி சென்று ஓட்டு கேட்போம் தி.மு.க ., கவுன்சிலர் குமுறல்
ஆவடி :ஆவடி மாநகராட்சி கூட்டம், மேயர் ஜி.உதயகுமார் தலைமையில் நேற்று நடந்தது. இக்கூட்டத்தில், மாநகராட்சி கமிஷனர் கந்தசாமி மற்றும் கவுன்சிலர்கள் பங்கேற்றனர்.
கூட்டத்தில் 83 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது. பெரும்பாலான கவுன்சிலர்கள், நாய் பிரச்னை மற்றும் எல்.இ.டி.,ல விளக்குகள் குறித்து அதிகம் விவாதித்தனர்.
மாமன்ற கூட்டத்தில் நடந்த விவாதங்களில், கவுன்சிலர்கள் பேசியதாவது:
கார்த்திக் காமேஷ், 48வது வார்டு ம.தி.மு.க., கவுன்சிலர்:
கோவர்தனகிரி பகுதியில், 10 அடி அகலம் உள்ள தெருக்களில் ‘பேவர் பிளாக்’ சாலை அமைக்க வேண்டும். பாதாளச் சாக்கடை திட்டத்தில், விடுபட்ட இடங்களில், தற்போது பணிகள் நடைபெற உள்ள இடங்கள் குறித்த தகவல்களை கவுன்சிலர்களுக்கு தெரிவிக்க வேண்டும்.
ரவி, 40வது வார்டு தி.மு.க., கவுன்சிலர்:
கீதா, 35வது வார்டு தி.மு.க., கவுன்சிலர்:
ஒவ்வொரு மாதமும் எதற்கு மீட்டிங் வைக்கப்படுகிறது என தெரியவில்லை. கடந்த கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்ட பணிகள் இதுவரை நடக்கவில்லை. எந்த பணியும் செய்யாத அதிகாரிகள், அடுத்த முறை கூட்டத்திற்கு வரக் கூடாது. அவர்கள் வந்தால் நாங்கள் வெளிநடப்பு செய்வோம். வடிகால், பாதாள சாக்கடை என எந்த பணியும் செய்யவில்லை. இப்படி இருந்தால் அடுத்த முறை, எப்படி மக்களிடம் சென்று ஓட்டு கேட்க முடியும்.
வீரபாண்டியன், 21வது வார்டு தி.மு.க., கவுன்சிலர்:
மாநகராட்சியில் உள்ள அனைத்து தெருக்களிலும் பெயர் பலகை வைக்க வேண்டும் என கேட்டிருந்தோம். இந்த பணிகள் இதுவரை நடக்கவில்லை. பெருமாள் கோவில் தெரு அருகே உள்ள சாலை படுமோசமாக உள்ளது. இதனால், அரசு சிற்றுந்து சென்று வருவதற்கு சிரமமாக உள்ளது. அதை சீரமைக்க வேண்டும்.
தமிழ்நாடு வீட்டுவசதி வாரியத்தில் உள்ள 40 அடி கால்வாய் சுவரில், பல இடங்களில் துளை உள்ளது. அதில் இருந்து வெளியேறும் கழிவுநீர் சாலையில் வழிந்தோடுகிறது. மேலும், பருத்திப்பட்டு ஏரிக்கு முன் 500 மீட்டர் துாரத்திற்கு, கால்வாயில் சுவர் இல்லாமல் அரைகுறையாக உள்ளது. எனவே, கால்வாயை சிறப்பு திட்டத்தில் சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
பிரகாஷ், 1வது வார்டு அ.தி.மு.க., கவுன்சிலர்:
எங்கள் வார்டில் சிறிய தெருக்களில் கூட கால்வாய் வசதி இல்லை. அங்கெல்லாம் வடிகால் வசதி ஏற்படுத்தி தர வேண்டும். உழைப்பாளர் நகரில், புதிதாக மாற்றப்பட்ட எல்.இ.டி., விளக்குகள், இரண்டு மாதமாக எரியவில்லை. முத்தாபுதுபேட்டை பகுதியில் நகர்ப்புற நலவாழ்வு மையம் அமைக்க வேண்டும். அதற்கான இடமும் தயார் நிலையில் உள்ளது.
மதுரை ஆறுமுகம், 25வது வார்டு அ.தி.மு.க., கவுன்சிலர்:
அண்ணனுார் 60 அடி சாலையை, தினமும் 3 லட்சத்திற்கும் மேற்பட்டேர் பயன்படுத்தி வருகின்றனர். இந்த சாலையில் வேகத்தடை அமைக்கப்படவில்லை. இதனால் வேகமாக செல்லும் வாகனங்களால், அடிக்கடி விபத்து ஏற்படுகிறது. எனவே, இந்த சாலையில் மூன்று வேகத்தடை அமைக்க வேண்டும்.
ராஜேந்திரன், 42வது வார்டு தி.மு.க., கவுன்சிலர்:
ஆவடி மாநகராட்சியில் உள்ள 48 வார்டிலும் எல்.இ.டி., விளக்குகள் சரியாக எரியவில்லை. புகார் தெரிவித்தால், கவுன்சிலர்கள் பேச்சை அவர்கள் மதிப்பதில்லை.
கவுன்சிலர்கள் தெரிவித்த கருத்துகள் குறித்து அதிகாரிகளிடம் ஆலோசித்து நடவடிக்கை எடுக்கப்படும் என, கமிஷனர் கந்தசாமி தெரிவித்தார்.