சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரத்தில் ரூ.338 கோடியில் வெள்ள மேலாண்மை பணி சோமங்கலத்தில் ரூ.20 கோடியில் புதிய நீர் தேக்கம்
சென்னை”சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டங்களில், 338 கோடி ரூபாயில், வெள்ள மேலாண்மை பணிகள் மேற்கொள்ளப்படும்,” என, நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் அறித்தார்.
சட்டசபையில் நேற்று, அவர் வெளியிட்ட அறிவிப்புகள்:
* அம்பத்துார் தொழிற்பேட்டையில், 130 கோடி ரூபாயில், வெள்ள மேலாண்மை தீர்வு பணிகள் மேற்கொள்ளப்படும்
* பள்ளிக்கரணை சதுப்பு நில பகுதிகளில் ஏற்படும் வெள்ள அபாயத்தை குறைக்க, ஒக்கியம் மடுவு அருகே, தெற்கு பக்கிங்ஹாம் கால்வாயிலிருந்து கடல் வரை, 91 கோடி ரூபாயில், வெள்ள போக்கு கால்வாய் வெட்டப்படும்
* சோழிங்கநல்லூர் தாலுகா, ஒக்கியம் மடுவில், 27 கோடி ரூபாயில் ஒருங்கிணைந்த மறு சீரமைப்பு பணிகளும், மணப்பாக்கம் கால்வாயில், 9.40 கோடி ரூபாயில் தடுப்புச் சுவர்களும் மேற்கொள்ளப்படும்
காஞ்சிபுரம்
* காஞ்சிபுரம் மாவட்டம், குன்றத்துார் தாலுகாவில், அடையாறு ஆற்றுடன் ஒரத்துார் கிளையாறு, மணிமங்கலம் கிளையாறுகளை இணைக்கும் வடிகால்வாய், 35 கோடி ரூபாயில் அமைக்கப்படும்
சோமங்கலம் கிளை நதியை சீமைத்து, 20 கோடி ரூபாயில் நீர்த்தேக்கம் அமைக்கப்படும். முகலிவாக்கம், மகாலட்சுமி நகரில், கெருகம்பாக்கம் கால்வாயில், 3.50 கோடி ரூபாயில் தடுப்புச்சுவர் அமைக்கப்படும்
திருவள்ளூர்
* திருவள்ளூர் மாவட்டம், திருநின்றவூரில், வெள்ள நீரை வெளியேற்ற, 9.10 கோடி ரூபாயில் மூடு கால்வாய் அமைக்கப்படும்
* பொன்னேரி தாலுகா, ஆரணியாற்றில் உள்ள லட்சுமிபுரம் ஆண்டார்மடம் அணைக்கட்டுகளுக்கு இடையே உள்ள கரைகள், 8.50 கோடி ரூபாயில் சீரமைக்கப்படும்.
* பூண்டி கிராமத்தில், கொசஸ்தலையாற்றின் குறுக்கே உள்ள, சத்தியமூர்த்தி சாகர் நீர்த்தேக்க, உபரிநீர் கால்வாயில், 2 கோடி ரூபாயிலும்; திருத்தணி தாலுகா, கண்டிகை கிராமத்தில், 1 கோடி ரூபாயிலும் வெள்ள தடுப்புச்சுவர் கட்டப்படும்
* திருவள்ளூர், பூந்தமல்லி தாலுகாக்களில், கிருஷ்ணா குடிநீர் இணைப்பு கால்வாயில், 1.50 கோடி ரூபாயில் தடுப்புச் சுவர் அமைக்கப்படும்
சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் மாவட்டங்களில் மொத்தம், 338 கோடி ரூபாயில், 12 வெள்ள மேலாண்மை பணிகள் மேற்கொள்ளப்படும்.
தடுப்பணைகள்
* திருத்தணி, கூளூர் – மாவூர் கிராமங்களில், கொசஸ்தலையாற்றின் குறுக்கே, 20 கோடி ரூபாயிலும்; திருவள்ளூர் பேரம்பாக்கத்தில், கூவம் ஆற்றின் குறுக்கே, 6.50 கோடி ரூபாயிலும் தடுப்பணைகள் அமைக்கப்படும்
செங்கல்பட்டு மாவட்டம், திருநீர்மலை ஏரி, 5.15 கோடி ரூபாயில், ஆழப்படுத்தப்பட்டு, சீரமைக்கப்படும். சேப்பாக்கம் மத்திய பக்கிங்ஹாம் கால்வாய் முதல் 5,000 மீட்டர் வரை 31 கோடியில் சீரமைக்கப்படும்
* திருவள்ளூர் மாவட்டம், சின்னநாகபுடி கிராமத்தின் அருகே, வீரமங்கலம் ஏரி , நான்கு கோடி ரூபாயில் சீரமைக்கப்படும். கண்டலேறு – பூண்டி கால்வாயில், முதல் 3.87 கி.மீ., பகுதிகள், 10.20 கோடி ரூபாயில் சீரமைக்கப்படும்
* திருவள்ளூர் தாலுகா, கிருஷ்ணா குடிநீர் வழங்கும் திட்ட ஊட்டுக்கால்வாயின் முதல், 3.30 கி.மீ., 10.75 கோடியில் சீரமைக்கப்படும்
* ஆர்.கே.பேட்டை தாலுகா, ஸ்ரீகாளிகாபுரம் பெரிய ஏரி, சித்தேரியின் கரைகள், 35 லட்சம் ரூபாயில் சீரமைக்கப்படும்
* பூண்டி நீர்த்தேக்கத்தில், 2.75 கோடி ரூபாயில், ஷட்டர்கள் சீரமைப்பு பணிகள் மேற்கொள்ளப்படும். கும்மிடிப்பூண்டி தாலுகா ஏரிகள், 1.50 கோடி ரூபாயில் சீரமைக்கப்படும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.