வீட்டு மனை கேட்டு கோட்டை அருகே பெரிய மேடு மக்கள் திடீர் போராட்டம்
சென்னை, ‘நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியத்தில் வீடு ஒதுக்க வேண்டும்’ எனக்கோரி, தலைமை செயலகம் அருகே போராட்டத்தில் ஈடுபட முயன்ற, 25க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டனர்.
சென்னையில், சாலை ஓரங்களில் பல ஆண்டுகளாக வசிப்போருக்கு, நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியத்தின் குடியிருப்புகளில் வீடுகள் ஒதுக்கப்படுகிறது.
அந்த வகையில், சென்னை பெரியமேடு வி.வி., கோவில் தெரு பகுதியில், சாலை ஓரங்களில் வசிப்போருக்கு வீடுகள் ஒதுக்கப்பட்டுள்ளது.
அதற்கான பட்டியலில், 30 பேரின் பெயர் விடுபட்டு போனதாக கூறப்படுகிறது. இதனால், தங்களுக்கும் வீடு ஒதுக்க வேண்டும் என, 25க்கும் மேற்பட்டோர், தலைமை செயலகம் அருகே நேற்று காலை, திடீரென போராட்டத்தில் ஈடுபட முயன்றனர்.
அவர்களை போலீசார் கைது செய்து, ராயபுரத்தில் உள்ள, தனியார் மண்டபத்தில் தங்க வைத்து மாலையில் விடுவித்தனர்.