அண்ணா சாலை, ஓ.எம். ஆர். ,ரில் நெரிசல் தீர்வுக்கு விரைவில் புதிய திட்டம் தயாரிப்பு

சென்னை:சென்னையில் அண்ணா சாலை, ஓ.எம்.ஆர்., எனும் பழைய மாமல்லபுரம் சாலை மற்றும் அதை ஒட்டிய பகுதிகளுக்கு, புதிதாக உள்ளூர் வளர்ச்சி திட்டம் தயாரிக்கும் பணிகளை, சி.எம்.டி.ஏ., துவக்கி உள்ளது.

சென்னையில் கட்டுமான திட்டங்களும், வாகன போக்குவரத்தும் அதிகம் உள்ள பகுதிகளில், நகர்ப்புற வளர்ச்சியை முறைப்படுத்த வேண்டிய கட்டாயம் எழுந்துள்ளது. இப்பகுதிகளில், முழுமை திட்ட அடிப்படையில் நில வகைப்பாடு மேற்கொள்ளப்பட்டு இருந்தாலும், அதற்கு மாறான வளர்ச்சி அதிகரித்து வருகிறது.

தனியார் மற்றும் பொது போக்குவரத்து வசதிகள் அதிகரித்தாலும், அண்ணா சாலை மற்றும் பழைய மாமல்லபுரம் சாலை பகுதிகளில் நெரிசல், ஒரு பெரிய பிரச்னையாக உள்ளது.

இப்பகுதியில் குடியிருப்போர், வேலைக்காக வந்து செல்வோர் என, மக்களின் எண்ணிக்கையும் உயர்ந்து வருகிறது.

இதை கருத்தில் வைத்து, இப்பகுதிக்கு புதிதாக உள்ளூர் வளர்ச்சி திட்டம் தயாரிக்க, தமிழக அரசு அனுமதி அளித்துள்ளது. இதற்கான பணிகளை, சி.எம்.டி.ஏ., துவக்கி உள்ளது.

இதுகுறித்து, சி.எம்.டி.ஏ., அதிகாரி ஒருவர் கூறியதாவது:

அண்ணா சாலையில், கிண்டி கத்திப்பாரா சந்திப்பு முதல் அரசினர் தோட்டம் வரையிலான 12.5 கி.மீ.; பழைய மாமல்லபுரம் சாலையில் எஸ்.ஆர்.பி., டூல்ஸ் பகுதியில் இருந்து, சோழிங்கநல்லுார் வரையிலான, 10 கி.மீ., தொலைவு, இதற்காக தேர்வு செய்யப்பட்டுள்ளது.

இந்த பகுதியில் வாகன போக்குவரத்து குறித்த தற்போதைய நிலவரம், எதிர்காலத்தில் ஏற்படும் வளர்ச்சி, அதற்கு தேவைப்படும் கட்டமைப்புகள் குறித்த விபரங்கள் திரட்டப்படும்.

இந்த சாலைகளில் இரண்டு பக்கங்களிலும் 164 அடி வரையிலான அகலத்தில் உள்ள நிலங்கள், கட்டடங்கள் குறித்த விபரங்கள் சேகரிக்கப்படும்.

இதில் நில வகைபாடு, தற்போதைய பயன்பாடு ஆகிய விபரங்கள் திரட்டப்பட்டு, அதற்கு ஏற்ப திட்டங்கள் தயாரிக்கப்படும்.

வாகனங்கள் பயன்பாடு மட்டுமல்லாது, மக்கள் நடந்து செல்வதற்கான வசதிகள் போன்ற அடிப்படையில் திட்டங்கள் தயாரிக்கப்படும்.

இப்பணிகளுக்கு கலந்தாலோசகர் தேர்வு செய்வதற்கான பணிகளை துவக்கி இருக்கிறோம். விரைவில் புதிய திட்டம் தயாரிக்கப்படும்.

இவ்வாறு அவர் கூறினார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *