பயணியை ‘ ஹெல்மெட் ‘ டால் தாக்கிய ரேபிடோ இருசக்கர வாகன ஓட்டுநர் கைது
சென்னை:கர்ப்பிணி மீது மோதுவது போல சென்றதை கண்டித்த, பயணியை,’ ஹெல்மெட்’டால் தாக்கிய ‘ரேபிடோ’ இருசக்கர வாகன ஓட்டுநரை போலீசார் கைது செய்தனர்
சென்னை, நுங்கம்பாக்கத்தைச் சேர்ந்தவர் ராஜசேகர், 28. இவர், நேற்று முன்தினம், மதியம், 2:30 மணியளவில், ரேபிடோ செயலியில், திருவல்லிக்கேணியில் இருந்து, நுங்கம்பாக்கம் செல்ல பதிவு செய்துள்ளார். சில நிமிடங்களில், ‘ரேபிடோ’ இரு சக்கர வாகன ஓட்டுநர், ராயபுரத்தைச் சேர்ந்த கிதியோன், 36, என்பவர் வந்துள்ளார்.
இவரின் இரு சக்கர வாகனத்தில் ராஜசகேர் ஏறிச்சென்றுள்ளார். கிதியோன் இருசக்கர வாகனத்தை தாறுமாறாக ஓட்டி உள்ளார். அண்ணாசாலை, தபால் நிலையம் அருகே சென்ற போது, அங்கு நடந்து சென்ற கர்ப்பிணி மீது மோதுவது போலவும் சென்றுள்ளார்.
இதனால், அவரிடம் இரு சக்கர வாகனத்தை நிறுத்தச்சொல்லி, தன் பயணத்தை ரத்து செய்வதாக ராஜசேகர் கூறி உள்ளார்.
இதனால் ஆத்திரமடைந்த கிதியோன், அவரை,’ஹெல்மெட்’டால் தாக்கி உள்ளார். சம்பவ இடத்தில் இருந்தோர் கிதியோனை பிடித்து சிந்தாதிரிப்பேட்டை காவல் நிலையத்தில் ஒப்படைத்துள்ளனர்.
போலீசார் விசாரித்து, கிதியோனை கைது செய்தனர். அவர் மீது எழும்பூர் காவல் நிலையத்தில், இரண்டு திருட்டு வழக்குகள் இருப்பது தெரியவந்துள்ளது.