36 கிரஷர்களின் மின் இணைப்பு துண்டிப்பு விதிகளை மீறியதால் நீதிமன்ற உத்தரவுபடி நடவடிக்கை

குன்றத்துார், குன்றத்துார் அடுத்த எருமையூரில், விதிகளை மீறியும் பல முறைகேடுகளிலும் ஈடுபட்ட 36 கல் அரவை ஆலைகளை முடக்கும் வகையில், நீதிமன்ற உத்தரவின்படி, அவற்றுக்கான மின்சாரம் நேற்று துண்டிக்கப்பட்டது.

சென்னை புறநகர், காஞ்சிபுரம் மாவட்டம் குன்றத்துார் அருகே, எருமையூர் ஊராட்சியில், 3,500க்கும் மேற்பட்டோர் வசிக்கின்றனர். 3.17 சதுர கி.மீ., பரப்பளவு உடைய இந்த ஊராட்சியில் கிரஷர் எனும் அரவை ஆலைகள் உள்ளன. மொத்தமுள்ள 52 கல் அரவை ஆலைகளில், 36 ஆலைகள், உரிய அனுமதியின்றி செயல்பட்டு வருகின்றன.

அரசு அதிகாரிகள், அரசியல் பிரமுகர்கள், ரவுடிகள் ஆதரவுடன், 15 ஆண்டுகளுக்கும் இந்த ஆலைகள் செயல்படுவதாக, அப்பகுதியினர் குற்றம் சாட்டுகின்றனர்.

இங்கு உடைக்கப்படும் ஜல்லிக்கற்கள், எம் – சாண்ட் உள்ளிட்டவை சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு உள்ளிட்ட மாவட்டங்களில், விற்பனைக்கு எடுத்துச் செல்லப்படுகின்றன.

குடியிருப்பு மற்றும் நீர்நிலைக்கு அருகில் 36 கல் அரவை ஆலைகள் இயங்குவதால், கற்கள் உடைப்பு, அரவை காரணமாக, அவற்றில் இருந்து எழும் துாசு மற்றும் இரைச்சல் சத்தம் வெளியேறி ஒலி, காற்று மற்றும் நீர்நிலைகள் மாசடைந்து வந்தன.

தமிழ்நாடு மாசு கட்டுப்பாடு வாரிய விதிமுறைகளை மீறி, இந்த ஆலைகள் இயங்கியதால், எருமையூர் மற்றும் அதை சுற்றியுள்ள குடியிருப்புவாசிகள், சுவாசக் கோளாறால் அவதிக்குள்ளாகி வந்தனர்.

இதுகுறித்து, எருமையூரைச் சேர்ந்த சம்பத் என்பவர், சென்னை உயர் நீதிமன்றத்தில் ‘ரிட்’ மனு தாக்கல் செய்தார்.

நீதிமன்ற விசாரணையில், எருமையூரில் செயல்படும் கல் அரவை ஆலைகள் அனைத்தும் விதிமுறைகளை மீறி, பல முறைகேடுகளில் ஈடுபட்டு இயங்கி வருவது உறுதியானது.

இதையடுத்து, ‘இந்த கல் அரவை ஆலைகளை உடனடியாக மூட வேண்டும். அதற்கான அறிக்கையை காஞ்சிபுரம் கலெக்டர், மாசு கட்டுப்பாடு வாரியம், கனிமவளத் துறை, மின் வாரியத்தினர், வரும் 27ல் நீதிமன்றத்தில் சமர்ப்பிக்க வேண்டும்’ என, நீதிபதிகள் எஸ்.எம்.சுப்பிரமணியம் மற்றும் கே.ராஜசேகர் அடங்கிய அமர்வு, இம்மாதம் 20ம் தேதி உத்தரவிட்டது.

இதையடுத்து நேற்று, மாசு கட்டுப்பாடு வாரியம், கனிமவளத் துறை, மின்வாரிய அதிகாரிகள், காவல் துறை பாதுகாப்புடன் எருமையூருக்கு சென்று, கல் அரவை ஆலைகளின் மின் இணைப்பை துண்டித்து நடவடிக்கை எடுத்தனர்.

மேலும், விரிவான அறிக்கையை நீதிமன்றத்தில் சமர்ப்பிக்க உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

நீண்ட ஆண்டுகளாக இயங்கி வந்த கல் அரவை ஆலைகள், நீதிமன்ற உத்தரவால் மூடப்பட உள்ளதால், எருமையூர் மற்றும் அதை சுற்றியுள்ள மக்கள் மகிழ்ச்சியடைந்து உள்ளனர்.

நிம்மதி

எருமையூரில் உள்ள மலையை குடைந்து, பல கோடி ரூபாய்க்கு கனிம வளம் கொள்ளை அடிக்கப்பட்டு உள்ளது. குவாரி இயங்குவது நிறுத்தப்பட்டாலும், வெளி பகுதிகளில் இருந்து கற்கள் எடுத்து வந்து, 24 மணி நேரமும் தடையின்றி, இந்த கல் அரவை ஆலைகள் இயங்கி வந்தன. இதுகுறித்து உள்ளூர் மக்கள், சமூக ஆர்வலர்கள், துறை சார்ந்த அரசு உயர் அதிகாரிகளிடம் பல முறை புகார் அளித்தும் நடவடிக்கை இல்லை. புகார் அளிப்பவரை, ரவுடிகள் மிரட்டுவதும் நடக்கிறது. நீதிமன்றம் உத்தரவால், எருமையூர் மக்களுக்கு நீதி கிடைத்துள்ளது

– எருமையூர் கிராம மக்கள்

என்னென்ன விதிமீறல்

* தேசிய நெடுஞ்சாலைகள் அல்லது மாநில நெடுஞ்சாலைகள் அல்லது மக்கள் வசிக்கும் இடங்கள், கல்வி நிறுவனங்கள், பொது அலுவலகங்கள் மற்றும் மத முக்கியத்துவம் வாய்ந்த இடங்களிலிருந்து 500 மீட்டருக்குள் கல் அரவை ஆலைகள் அமையக்கூடாது.*துாசு, மாசு தாக்கத்தைத் தவிர்க்க கல் அரவை ஆலைகள் இடையே, குறைந்தபட்சம் ஒரு கி.மீ., துாரம் இடைவெளி இருக்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு விதிமுறைகள் உள்ளன. இந்த விதிமுறைகள் எதையும் பின்பற்றாமல், எருமையூரில் அருகருகே ஆலைகள் விதிமுறை மீறி இயங்கியுள்ளன.

குவாரி, ஏரி நீர் மாசு

சாலைகளும் படுமோசம்எருமையூரில் கைவிடப்பட்ட 10க்கும் மேற்பட்ட கல்குவாரிகள் உள்ளன. இவை ஒவ்வொன்றும் 200 முதல் 400 அடிக்கு மேல் ஆழம் உடையவை. கடந்த 2017ம் ஆண்டு வறட்சியின்போது, எருமையூர் கல் குவாரிகளில் தேங்கிய நீரை சுத்திகரித்து தினம் 10 மில்லியன் லிட்டர் தண்ணீரை குடிநீராக வினியோகம் செய்யும் நடவடிக்கைகளை, குடிநீர் வாரியம் மேற்கொண்டது. இதற்காக, குவாரியில் மிதவை நீர் இறைக்கும் மோட்டார், குடிநீர் எடுத்து செல்ல குழாய் பதிக்கும் பணிகள் நடந்தன. அதன்பின், பருவமழை நன்றாக பெய்ததால், குடிநீர் எடுக்கும் பணிகள் ஒத்தி வைக்கப்பட்டன. செம்பரம்பாக்கம் ஏரியில் இருந்து உபரி நீரை, எருமையூர் கல்குவாரியில் தேக்கி வைக்க அரசு சார்பில் திட்டமிடப்பட்டுள்ளது. இந்நிலையில், கல் அரவை தொழிற்சாலைகளில் இருந்து வெளியேறும் துகளால், குவாரி நீர் கலந்து மாசடைந்துள்ளது. இதேபோல் சில கல் அரவை ஆலைகள், எருமையூர் ஏரியின் உள்ளேயும் இயங்குவதால், அந்த ஏரி நீரும் மாசடைந்துள்ளது. மேலும், இங்கிருந்து ஜல்லிக்கற்கள், எம் – சாண்ட் ஏற்றி செல்லும் லாரிகளால், சாலைகள் பல குண்டும் குழியுமாக உள்ளன.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *