மீண்டும் கழிவுநீர் குழாய் உடைப்பு புழுதிவாக்கத்தில் துர்நாற்றத்தால் தவிப்பு
உள்ளகரம் – -புழுதிவாக்கம் நகராட்சியாக இருந்தபோது, ஜவஹர்லால் நேரு நகர்ப்புற புனரமைப்பு திட்டத்தின் கீழ், 2009ல் பாதாள சாக்கடை மற்றும் குடிநீர் திட்டங்களுக்கான பணிகள் துவங்கின.
பத்து ஆண்டுகளுக்கு பின், இத்திட்டப்பணிகள் முழுமை பெற்று இணைப்பு வழங்கப்பட்டது.
இதில், புழுதிவாக்கம் பகுதியில், பாதாள சாக்கடை இணைப்பிற்கான பிரதான குழாய், ராமலிங்கா நகர் பிரதான சாலையில், 1.2 கி.மீ., துாரத்திற்கு, 27 அடி ஆழத்தில் உள்ளது.
சதாசிவம் நகர், ராமலிங்கா நகர், ராம்நகர் உள்ளிட்ட பகுதி கழிவுநீர், இந்த பிரதான குழாய் வழியாக கழிவு நீரோற்று நிலையம் சென்று, அங்கிருந்து பெருங்குடி கொண்டு செல்லப்படுகிறது.
போக்குவரத்து நிறைந்த இச்சாலையில், மடிப்பாக்கம், புழுதிவாக்கம் பகுதியை சேர்ந்த ஏராளமானோர், மவுன்ட்- – வேளச்சேரி சாலையை, ஆதம்பாக்கம் அடைய பயன்படுத்துவர்.
ராமலிங்கா நகரில் செல்லும் பிரதான குழாயில் அடிக்கடி உடைப்பு ஏற்படுவதால், வீடுகளில் இருந்து கழிவுநீர் வெளியேறாமல் பாதிப்பை ஏற்படுத்துகிறது.
பிரதான குழாயில், இதுவரை மூன்று முறைக்கு மேல் உடைப்பு ஏற்பட்டு சீரமைக்கப்பட்டுள்ள நிலையில், மீண்டும் ராமலிங்கா நகர் பிரதான சாலையில் கடந்த 10 நாட்களுக்கு முன் உடைப்பு ஏற்பட்டுள்ளது.
உடைப்பு ஏற்பட்டுள்ள பகுதியில், சாலை பத்து அடி ஆழத்திற்கு உள்வாங்கியுள்ளது. நான்கு சக்கர வாகனங்கள் ஒரு வித அச்சத்துடன் அச்சாலையை கடக்கவேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.
இதையடுத்து, டீசல் மோட்டார் வாயிலாக உடைப்பு ஏற்பட்ட பகுதியில், குழாய் வழியாக, ‘பை-பாஸ்’ செய்து, கழிவுநீர் கடத்தப்பட்டு வருகிறது. மோட்டார் இயங்காவிட்டால் சிக்கல் ஏற்படுகிறது.
இதனால், சில நாட்களாக புழுதிவாக்கம், ஸ்ரீனிவாசா நகர், ராம்நகர், சிவப்பிரகாசம் நகர், பாகிரதி நகர், ஷீலா நகர், சதாசிவம் நகர் ஆகிய பகுதி தெருக்களில், பாதாள சாக்கடை ‘மேன்-ஹோல்’ வழியாக, கழிவுநீர் வெளியேறி சாலையில் தஞ்சமடைந்து வருகிறது.
கழிவுநீர் சாலையில் சங்கமிப்பதால், துர்நாற்றம் ஏற்பட்டு, அப்பகுதிவாசிகள் தவித்து வருகின்றனர்.
இது குறித்து தொடர் புகார் அளித்தும், குடிநீர் மற்றும் கழிவுநீர் அகற்று வாரியத்தினர் உரிய நடவடிக்கை எடுக்கவில்லை என கூறப்படுகிறது.
எனவே, இப்பிரச்னைக்கு நிரந்த தீர்வாக, பாதாள சாக்கடை பிரதான குழாயை முழுமையாக மாற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும்.
தற்போது, உடைப்பு ஏற்பட்டுள்ள பகுதியை விரைவில் கண்டறிந்து, உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என, அப்பகுதிவாசிகள் கோரியுள்ளனர்.
— நமது நிருபர்- –