பூந்தமல்லி – போரூர் மெட்ரோ ரயில் டிசம்பரில் ஓடும் முதற்கட்ட சோதனை வெற்றியால் நிர்வாகிகள் நம்பிக்கை
சென்னை, பூந்தமல்லி – போரூர் இடையே மெட்ரோ ரயில் சேவை வரும் டிசம்பரில் துவங்கப்படும் என, சென்னை மெட்ரோ ரயில் நிறுவன அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
சென்னையில், இரண்டாம் கட்ட மெட்ரோ ரயில் திட்டம், 116 கி.மீ., துாரம் மூன்று வழித்தடங்களில் செயல்படுத்தப்படுகிறது. இதில், கலங்கரை விளக்கம் – பூந்தமல்லி வழித்தடம் முக்கியமானது.
இத்தடத்தில், பூந்தமல்லி – போரூர் இடையே பல இடங்களில், ரயில் பாதை அமைக்கும் பணிகள், பொறியியல் கட்டுமான பணிகள் இறுதிகட்டத்தை எட்டியுள்ளன.
இந்நிலையில், இந்த தடத்தில் ஒரு பகுதியாக, பூந்தமல்லி – முல்லைத்தோட்டம் இடையே 3 கி.மீ., துாரத்திற்கு மேம்பால பாதையில் ரயில் இயக்க திட்டமிடப்பட்டது.
அதன்படி, நேற்று முன்தினம் மாலையில், மெட்ரோ ரயில் இயக்கி சோதனை நடத்தும்போது, மின்கம்பி அறுந்ததால் மின் வினியோகத்தில் சிக்கல் ஏற்பட்டது.
இந்த கோளாறு சரிசெய்த பின், நள்ளிரவில் மெட்ரோ ரயிலை இயக்கி வெற்றிகரமாக சோதனை செய்யப்பட்டது.
இரண்டாம் கட்ட திட்டத்தில் முதல்முறையாக, பூந்தமல்லி – கலங்கரை விளக்கம் தடத்தில், பூந்தமல்லி புறவழிச்சாலை நிலையத்திலிருந்து முல்லைத் தோட்டம் நிலையம் வரை 3 கி.மீ., துாரத்திற்கு, வெற்றிகரமாக சோதனை ஓட்டம் நடத்தப்பட்டு உள்ளது.
சீரான வேகத்தில் ரயில் இயக்கப்பட்டது. தவிர, நிலையங்களில் சரியாக நிற்கிறதா, சிக்னலில் ஏதேனும் பிரச்னை வருகிறதா என சோதிக்கப்பட்டது. அனைத்தும் நிறைவாக இருந்தது.
இதையடுத்து, அடுத்த மாதம், பூந்தமல்லி – போரூர் வரை, மெட்ரோ ரயில் இயக்கி சோதனை நடத்த திட்டமிட்டுள்ளோம்.
மெட்ரோ ரயில் பாதை, ரயில் நிலையங்களில் கட்டுமான பணிகள், பாதுகாப்பு அம்சங்கள் குறித்து ஆய்வு நடத்தி உறுதி செய்யப்படும்.
இதையடுத்து, பூந்தமல்லி – போரூர் இடையே, வரும் டிச., மாதத்துக்குள் மெட்ரோ ரயில் சேவை துவங்கப்படும்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.