பாலத்தின் மீது பஞ்சராகி நின்ற லாரி மீது கார் மோதி விபத்து டிரைவர் பலி, 6 பேர் காயம்: கோயிலுக்கு சென்று திரும்பிய போது பரிதாபம்

சென்னை: மதுரையில் பறக்கும் மேம்பாலத்தில் பஞ்சராகி நின்ற லாரி மீது கார் மோதி டிரைவர் உடல் நசுங்கி உயிரிழந்தார். சென்னையில் இருந்து வந்த ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 2 குழந்தைகள் உள்பட 6 பேர் படுகாயமடைந்தனர். சென்னையை சேர்ந்த 6 பேர் கொண்ட ஒரு குடும்பத்தினர் சுவாமி தரிசனத்திற்காக நேற்று மதுரை அழகர் கோயிலுக்கு வந்தனர். வாடகை காரை, மதுரை காமராஜபுரம் பகுதியை சேர்ந்த மதியழகன் (38) ஓட்டிச் சென்றார். கோயிலில் சுவாமி தரிசனம் செய்துவிட்டு மதுரை நோக்கி காரில் திரும்பினர். மதுரை – நத்தம் பறக்கும் பாலத்தின் மீது கார் சென்றபோது, பாலத்தின் நடுவே பஞ்சராகி நின்ற செங்கல் லாரி மீது பயங்கரமாக மோதியது. இதில் கார் முழுவதுமாக நொறுங்கியது. கார் டிரைவர் மதியழகன் சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி உயிரிழந்தார். காரில் இருந்த 6 பேரும் படுகாயமடைந்தனர்

சம்பவ இடத்திற்கு வந்த தல்லாகுளம் போலீசார், தீயணைப்பு வீரர்கள் கார் கதவை உடைத்து டிரைவர் மதியழகனின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மதுரை அரசு மருத்துமவனைக்கு அனுப்பி வைத்தனர். காயமடைந்த 2 குழந்தைகள் உள்பட 6 பேரும் மதுரை கே.கே.நகர் பகுதியில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர். விபத்து குறித்து தல்லாகுளம் போக்குவரத்து போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர். சொகுசு காரில் பாதுகாப்பு பலூன் இருந்து வெளியில் வந்த நிலையிலும் ஓட்டுநர் பரிதாபமாக உடல் நசுங்கி உயிரிழந்துள்ளார். விபத்து காரணமாக இந்த பாலத்தில் சிறிதுநேரம் போக்குவரத்து பாதித்தது

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *