சிறுபான்மை மாணவர்களுக்கான கல்வி உதவி தொகைக்கு கூடுதல் நிதி ஒதுக்க வேண்டும்: வக்பு திருத்த சட்டத்திற்கு எதிராக சட்டசபையில் தீர்மானம் ஜவாஹிருல்லா எம்எல்ஏ பேச்சு
சென்னை: சட்டப்பேரவையில் பட்ஜெட் மீதான விவாதத்தில் பாபநாசம் எம்எல்ஏ எம்.எச்.ஜவாஹிருல்லா (மமக) பேசியதாவது: சிறுபான்மையினர் நலனில் மிகவும் அக்கறைக் கொண்ட இந்த அரசு, அதன் காரணமாகத்தான் வக்பு சொத்துகளை அபகரிக்கக்கூடிய வகையில் ஒரு வஞ்சகமான வக்பு திருத்தச் சட்டம் நாடாளுமன்றத்தில் கொண்டு வரப்பட்டபோது, திமுக எம்பிக்கள் அதனை வன்மையாகக் கண்டித்திருக்கிறார்கள். இந்த வஞ்சக வக்பு திருத்தச் சட்டத்திற்கு எதிராக கர்நாடகா சட்டமன்றத்தில் ஒரு தீர்மானம் நிறைவேற்றியிருக்கிறார்கள். அப்படியான ஒரு தீர்மானத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் தமிழ்நாட்டில் நிறைவேற்ற வேண்டும்.
ஒன்றிய பாஜ அரசு 2022ம் ஆண்டு சிறுபான்மை மாணவர்களுக்கு தரக்கூடிய கல்வி உதவித் தொகையை நிறுத்திய பிறகு, தமிழ்நாடு அரசு வக்பு வாரியத்திற்கு 12 கோடி ரூபாய் வழங்கியது. அதில் ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட ஒன்றாம் வகுப்பு முதல் எட்டாம் வகுப்பு வரை படிக்கக்கூடிய அரசு மற்றும் அரசு உதவிப் பெறும் பள்ளிகளில் படிக்கக்கூடிய சிறுபான்மை மாணவர்களுக்கு கல்வித் தொகை வழங்கப்பட்டு வருவதை நான் பாராட்டுகிறேன். அயல் நாட்டிற்கு உயர் கல்வி ஆராய்ச்சி படிப்பிற்காக செல்லக்கூடிய சிறுபான்மை சமூக மாணவர்களுக்கும் தனியாக கல்வி உதவித் தொகை வழங்கப்பட வேண்டுமென்று இந்த நேரத்தில் கேட்டுக்கொள்கிறேன்.