தமிழகத்தை கலவர பூ மியாக்க நினைத்தால் முதல்வர் இரும்புக்கரம் கொண்டு அடக்குவார்: அமைச்சர் சேகர்பாபு பேட்டி
சென்னை: தமிழகத்தை கலவர பூமியாக்க நினைத்தால் முதல்வர் அதனை இரும்புக்கரம் கொண்டு அடக்குவார், என்று அமைச்சர் பி.கே.சேகர்பாபு தெரிவித்தார். தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் பிறந்தநாளையொட்டி சென்னை கிழக்கு மாவட்ட திமுக சார்பில் மக்கள் முதல்வரின் மனிதநேய விழா கொண்டாடப்பட்டு வருகிறது. அதன்படி, திருவிக நகர் தெற்கு பகுதி சார்பில் ஓட்டேரி வாழை மாநகர் மற்றும் புளியந்தோப்பு கிரே நகர் உள்ளிட்ட பகுதிகளில் ‘அன்னம் தரும் அமுதக்கரங்கள்’ நிகழ்வு நேற்று நடந்தது. இதில், இந்து சமய அறநிலையத்துறை அமைச்சரும், சென்னை கிழக்கு மாவட்ட செயலாளருமான பி.கே.சேகர்பாபு கலந்துகொண்டு ஏழை, எளிய மக்களுக்கு உணவு வழங்கினார். இந்நிகழ்ச்சியில் திருவிக நகர் சட்டமன்ற உறுப்பினர் தாயகம் கவி மற்றும் கழக நிர்வாகிகள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
தொடர்ந்து, அமைச்சர் பி.கே.சேகர்பாபு நிருபர்களிடம் கூறியதாவது: தமிழ்நாடு காவல்துறை ஸ்காட்லாந்து யார்டுக்கு இணையானது. அண்ணாமலை போன்ற டூப் போலீஸ் இல்லை. தமிழ்நாடு காவல்துறையின் அதிரடி நடவடிக்கையால் கொலை, கொள்ளையர்கள் போன்ற சமூக விரோதிகள் அண்டை மாநிலத்திற்கு குடிபெயர்கின்றனர். தமிழ்நாட்டை அமைதிப் பூங்காவாக வைத்திருப்பதில் அண்ணாமலைக்கு உடன்பாடு இல்லையென்பதால் தமிழக போலீசாருக்கு இனி தூக்கம் இருக்காது, என்கிறார்.
தமிழக வெற்றிக் கழகத்தினர் முதலில் களத்திற்கு வரட்டும். தமிழ்நாட்டின் ‘பி’ டீம் யார் என்பது அனைவருக்கும் தெரியும். தமிழ்நாட்டின் உரிமை, கொள்கை கோட்பாடுகளில் யார் உறுதியோடு உள்ளார் என்பது அனைவருக்கும் தெரியும். ஜி.எஸ்.டி, நிதியளிக்கவில்லை, வெள்ள நிவாரணம் அளிக்கவில்லையா என்றால் அதுகுறித்து கவலைப்படவில்லை. ஒன்றிய அமைச்சர்கள் அனைவரையும் தமிழ்நாட்டிற்கு அனுப்பி பார்க்க முடிந்தால் அனுப்பி பாருங்கள். முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆட்சி செய்யும் வரை எந்த அணியாலும் ஆட்சியை அசைக்க முடியாது.
திருச்செந்தூரில் எதிர்பாராதவிதமாக ஒருவர் உயிரிழந்துள்ளார். அப்போதே சிலர் வந்து அவரது மனைவியிடம் பேசி பேட்டியளிக்க கூறுகின்றனர். கூட்ட நெரிசலால் உயிரிழப்பு நிகழவில்லை. கோயிலின் பாதுகாப்புக்கும் இதற்கும் தொடர்பில்லை. திருச்செந்தூர் கோயிலின் பணிகளுக்கு அவதூறு ஏற்படுத்தும் வகையில் இயற்கை மரணங்களுக்கு துறைமீது கலர்பூச முற்படுபவர்களின் நாடகம் எடுபடாது. இதுபோன்ற செயல்கள் மூலம் தமிழ்நாட்டை கலவர பூமியாக்க நினைத்தால் முதல்வர் அதனை இரும்புக்கரம் கொண்டு அடக்குவார். இவ்வாறு அவர் கூறினார்.