சென்னையில் இருந்து டெல்லி புறப்பட்ட விமானத்தில் இயந்திர கோளாறு: ஓடுபாதையில் அவசரமாக நிறுத்தம்
சென்னை: சென்னையில் இருந்து டெல்லி புறப்பட்ட இண்டிகோ பயணிகள் விமானத்தில் திடீர் இயந்திர கோளாறு ஏற்பட்டதால் விமானம் அவசர அவசரமாக நிறுத்தப்பட்டது. சென்னையில் இருந்து டெல்லி செல்லும் இண்டிகோ ஏர்லைன்ஸ் பயணிகள் விமானம், நேற்று அதிகாலை 2.30 மணியளவில் சென்னை உள்நாட்டு விமான நிலையத்தில் இருந்து, டெல்லிக்கு புறப்பட்டது. விமானத்தில் 148 பேர் இருந்தனர். விமானம் ஓடுபாதையில் ஓடத் தொடங்கியபோது, திடீரென இயந்திரத்தில் தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டதை கண்டுபிடித்த விமானி, உடனடியாக, சென்னை விமான நிலைய கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் தெரிவித்து விமானத்தை ஓடுபாதையிலேயே நிறுத்தினார். இதைத்தொடர்ந்து விமான பொறியாளர்கள் குழுவினர் இயந்திரக் கோளாறை சரி செய்தனர். அதனைத்தொடர்ந்து அதிகாலை 4 மணியளவில் பயணிகளுடன் விமானம் டெல்லி நோக்கி புறப்பட்டுச் சென்றது. சரியான நேரத்தில் கோளாறு கண்டுபிடிக்கப்பட்டதால் விபத்து தவிர்க்கப்பட்டது. இதனால் பயணிகள் நிம்மதி அடைந்தனர்.
விமானங்கள் ரத்து: அதேபோல, சென்னை விமான நிலையத்தில் போதிய பயணிகள் இல்லாததால் லண்டன், ஹைதராபாத் செல்லும் விமானங்கள் ரத்து செய்யப்பட்டன. சென்னை விமான நிலையத்தில் அடுத்தடுத்து 2 வருகை விமானங்கள், 2 புறப்படும் விமானங்கள் என மொத்தம் 4 விமானங்கள், திடீரென ரத்து செய்யப்பட்டது. விமானங்களில் பயணிக்க போதியளவில் பயணிகள் இல்லாததால் விமானங்கள் ரத்து செய்யப்பட்டதாக விமான நிலைய அதிகாரிகள் தெரிவித்தனர்.