மக்கள் தொகை அதிகமாக உள்ளதால் சான்றிதழ் வழங்குவதில் தாமதம்; எழும்பூர் தாலுகா அலுவலகத்தை இரண்டாக பிரிக்கவேண்டும்: சட்ட சபையில் இ.ப ரந்தாமன் எம்எல்ஏ வலியுறுத்தல்
சென்னை: மக்கள் தொகை அதிகமாக உள்ளதால் சான்றிதழ் வழங்குவதில் தாமதம் ஏற்படுவதை தவிர்க்கும் வகையில் எழும்பூர் தாலுகா அலுவலகத்தை 2 ஆக பிரிக்க வேண்டும் என்று சட்டசபையில் இ.பரந்தாமன் எம்எல்ஏ வலியுறுதினார். சட்டப்பேரவையில் கேள்வி நேரத்தின் போது துணை கேள்வி எழுப்பி எழும்பூர் எம்எல்ஏ இ.பரந்தாமன் பேசியதாவது: எழும்பூர் தாலுகா எழும்பூர் 1, எழும்பூர் 2 மற்றும் புலியூர் வில்லேஜ் போன்ற மிக மக்கள் தொகை அதிகமாக இருக்கக்கூடிய ஒரு தாலுகாவாக இருக்கிறது. இதனால், அதிகாரிகளுக்கு பணிச்சுமை இருக்கிறது. மேலும், பல்வேறு தேவைகளுக்கு பொதுமக்களுக்கு சான்றிதழ் வழங்குவதற்கு தாமதம் ஏற்படுகிறது.
காரணம் மக்கள் ெதாகுதி அதிகமாக இருக்கிறது. அதனால், எழும்பூர் தாலுகா அலுவலகத்தை இரண்டாக பிரிக்க வேண்டும்.இவ்வாறு அவர் பேசினார். இதற்கு பதில் அளித்து அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன் பேசுகையில், “எம்எல்ஏக்கள் அனைவரும் தங்கள் பகுதியில் உள்ள தாலுகா அலுவலகங்களை பிரிக்க வேண்டும். ஆர்டிஓ அலுவலங்களை பிரிக்க வேண்டும் என்று சொல்லியிருக்கிறார்கள். சென்னையை பொறுத்தவரை ஒவ்வொரு தாலுகாவிலும் எதிர்ப்பார்ப்பதை விட மக்கள் தொகை அதிகமாக இருக்கிறது. நிர்வாகத்தில் சிரமம் இருப்பதை எல்லாம் அரசாங்கம் உணர்ந்து இருக்கின்றது. தகுந்த ஏற்பாடுகளை அரசாங்கம் நிச்சயமாக செய்யும்,’ என்றார்.