மழை நீர் வடிகால் பணி முறையாக நடக்கவில்லை கவுன்சிலர் குற்றச்சாட்டு
திருவொற்றியூர்:திருவொற்றியூர் மண்டல குழு கூட்டம், தி.மு.க., மண்டல குழு தலைவர் தி.மு.தனியரசு தலைமையில் நடந்தது. இதில், மண்டல உதவி கமிஷனர் விஜய்பாபு, செயற்பொறியாளர் பாபு, நல அலுவலர் லீனா உள்ளிட்ட அதிகாரிகள் பங்கேற்றனர்.\
இக்கூட்டத்தில், 94 தீர்மானங்கள் நிறைவேறின. அடிப்படை வசதிகள் மற்றும் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் குறித்து, கவுன்சிலர்கள் பேசினர்.
அவர்கள் பேசியதாவது:
ஜெயராமன், 4வது வார்டு இ.கம்யூ., கவுன்சிலர்:
எனது வார்டில், ஒரு பணியாளர், 10 தெருக்களில் துாய்மை பணி மேற்கொள்வது சிரமமாக உள்ளது. ஊழியர்கள் எண்ணிக்கை அதிகரிக்கப்பட வேண்டும். மழைநீர் வடிகால் பணிகளை, ஒப்பந்ததாரர் முறையாக மேற்கொள்வதில்லை. வார்டில், 100 சாலைகள் சீரமைக்கப்பட வேண்டி உள்ளது.
சுசீலா, 13வது வார்டு தி.மு.க., கவுன்சிலர்
வார்டு, 10, 11, 12 ஆகிய வார்டுகளின் மழைநீர் கால்வாய், 13வது வார்டுக்கு வருகிறது. அங்கு, வெளியேற வழியில்லாமல், பின்னோக்கி ஊருக்குள் ஏறி பாதிப்பை ஏற்படுத்துகிறது. தேங்கும் நீரில் கொசுக்கள் அதிகளவில் உற்பத்தியாகிறது. ஓராண்டாக, உயர்கோபுர மின்விளக்கு கோரி வருகிறேன்.
கோமதி, 2 வது வார்டு சுயேட்சை கவுன்சிலர்
காட்டுகுப்பத்தில், குடிநீரில் கழிவுநீர் கலந்து வருகிறது. சின்னகுப்பம், பெரியகுப்பத்தில், குடிநீர் வருவதில்லை. லாரி குடிநீர் வருவதிலும் சிக்கல் உள்ளது.
சாமுவேல் திரவியம், 6வது வார்டு காங்., கவுன்சிலர்
நகர்ப்புற நலவாழ்வு மையம் அமைக்கப்பட வேண்டும். ஈமசடங்கு மண்டபம், 2000ல் கட்டப்பட்டது. அதை இடித்து, இரு தளம் கொண்ட கட்டடம் கட்டி தர வேண்டும். அம்பேத்கர் நகரில், பாதாள சாக்கடை இணைப்பு உள்ளது. அதை பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும். குடிநீர் அழுத்தம் அதிகரிக்க வேண்டும்.
சொக்கலிங்கம், 5 வது வார்டு தி.மு.க., கவுன்சிலர்
விடுபட்ட, 269 தெருக்களில் பாதாள சாக்கடை அமைக்க வேண்டும். 33 கிராமத்திற்கு, ஐந்து பம்புகள் போதுமானதாக இருக்காது. 25 பம்புகள் போட்டு தர வேண்டும். பேருந்து நிழற்குடைகளின் கூரை பெயர்ந்துள்ளதால், சீரமைத்து தர வேண்டும். பிற துறை அதிகாரிகளும் கூட்டத்தில் பங்கேற்க வேண்டும். சமத்துவ சுடுகாடு திருவொற்றியூரில் அமைய வேண்டும்.
தி.மு. தனியரசு, தி.மு.க., மண்டல குழு தலைவர்
துாய்மை பணி மேற்கொள்ள, கூடுதலாக, 350 பணியாளர்கள் வேண்டும். நகராட்சியாக இருக்கும்போது, 15 குடிநீர் லாரிகள் இருந்தது. தற்போது, மண்டலத்திற்கே நான்கு லாரிகள் போதுமானதல்ல; அதிகரிக்க வேண்டும். என்.டி.ஓ., குப்பம் – ஒண்டிகுப்பம் வரை, இரண்டாம் கட்டமாக கடற்கரை அழகுபடுத்தும் திட்டம் நடக்கவிருக்கிறது. 9.70 கோடி ரூபாய் செலவில், பட்டினத்தார் சுடுகாடு புனரமைக்கப்பட உள்ளது. வார்டின் பணிகள் குறித்து, கவுன்சிலர்களுக்கு தெரியப்படுத்த வேண்டும்.
விஜய் பாபு, திருவொற்றியூர் மண்டல உதவி கமிஷனர்
நான்கு ரயில்வே குளத்திற்கு, தடையின்மை சான்று வாங்கப்பட்டுள்ளது. விரைவில் பணிகள் துவங்கும். சாலைகள் பணிகள், 20 சதவீதம் மட்டுமே பாக்கியுள்ளது. அனைத்து துறை அதிகாரிகளும், பழைய கட்டடம் குறித்து, தகவல் தெரிவித்தால், இடித்து தரப்படும். போக்குவரத்து சந்திப்புகளின், ‘ஐ லாண்ட் தீம் பார்க்’ அமைக்கப்பட உள்ளது. மாநகராட்சி சொத்தை சேதப்படுத்தினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும். சுடுகாடுகளில், உயர்கோபுர மின் விளக்குகள், ‘சிசிடிவி’ கேமரா பொருத்தப்படும்.