சேதமான குடிநீர் தொட்டியை சீரமைக்க கோரிக்கை
பள்ளிக்கரணை:பள்ளிக்கரணை செல்வம் நகர் பிரதான சாலையில் உள்ள குடிநீர் தொட்டி சேதமடைந்துள்ளது.
இப்பகுதி, மக்கள் குடிநீர் தொட்டியை நம்பி உள்ளனர். வாரத்தில் இரு நாட்கள் தொட்டியில் மெட்ரோ தண்ணீர் விடப்படுகிறது.
தண்ணீர் தொட்டி சாலையின் வளைவில் உள்ளதால், நான்கு நாட்களுக்கு முன் அடையாளம் தெரியாத வாகனம் மோதியதில், தொட்டி சேதமடைந்துள்ளது.
கோடைகாலம் நெருங்குவதால், சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள், தண்ணீர் தட்டுப்பாடு ஏற்படும் முன், சேதமடைந்த தொட்டியை அகற்றி புதிய தொட்டி அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென, பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
அதே பகுதியில், ராமலிங்க அடிகளார் தெருவில் அமைந்துள்ள, தண்ணீர் தொட்டியின் அடித்தளம் சேதமடைந்துள்ளது.
இதனால், மண் சரிவு ஏற்பட்டு தொட்டி கீழே சாய்ந்து விபத்து ஏற்படும் நிலை உள்ளது. சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் சீர்செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என, பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.