தீப்பிடித்து எரிந்த எலக்ட்ரிக் பைக் தம்பதி , 7 மாத குழந்தை படுகாயம்
மதுரவாயல்:மதுரவாயல், பாக்யலட்சுமி நகர், அன்னை இந்திராகாந்தி தெருவைச் சேர்ந்தவர் நடராஜன். இவரது மகன் கவுதம், 31; தனியார் நிறுவன ஊழியர்.’
நடராஜன் தன் எலக்ட்ரிக் பைக்கை, வீட்டின் வாசல் பகுதியில் நிறுத்தி சார்ஜ் போடுவது வழக்கம். நேற்று முன்தினம் இரவு ‘சார்ஜ்’ போட்டு விட்டு, வீட்டின் முதல் தளத்திற்கு துாங்கச் சென்றுள்ளார்.
இந்நிலையில், நேற்று அதிகாலை கரும்புகை வெளியேறியது. வீட்டின் கீழ்த்தளத்தில் துாங்கி கொண்டிருந்த அவரது மகன் கவுதம் வெளியே வந்து பார்த்துள்ளார். அப்போது, எலக்ட்ரிக் பைக் கொழுந்து விட்டு எரிந்தது.
இதனால், செய்வது அறியாது தவித்த கவுதம், தன் மனைவி மஞ்சு, 28, மற்றும் 9 மாத கைக்குழந்தை எழிலரசி ஆகியோருடன், வீட்டை விட்டு வெளியேற முயன்றபோது, அவர்கள் மீதும் தீ பிடித்துள்ளது.
இதில், பலத்த தீக்காயம் அடைந்த மூன்று பேரின் கதறல் சத்தம் கேட்டு, வீட்டில் உள்ளவர்களும் அக்கம் பக்கத்தினரும் திரண்டு, அவர்களை மீட்டு கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர்.
அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. விபத்து குறித்து மதுரவாயல் போலீசார் விசாரிக்கின்றனர்.