குழந்தைகள் நல ஆஸ்பத்திரியில் உலக தாய்ப்பால் வார தொடக்க விழா

உலக தாய்ப்பால் வாரம் ஆகஸ்டு மாதம் 1-ந்தேதி முதல் 7-ந்தேதி வரை கொண்டாடப்படுகிறது. அதன்படி சென்னை எழும்பூர் அரசு குழந்தைகள் நல ஆஸ்பத்திரியில் உலக தாய்ப்பால் வார தொடக்க விழா நேற்று நடைபெற்றது.

விழாவில் சிறப்பு விருந்தினர்களாக மருத்துவக்கல்வி இயக்குனர் டாக்டர் நாராயணபாபு மற்றும் சென்னை மருத்துவ கல்லூரியின் டீன் டாக்டர் தேரணி ராஜன் ஆகியோர் கலந்துகொண்டனர்.

நிகழ்ச்சியில் டீன் டாக்டர் தேரணி ராஜன் பேசியதாவது:-

உலக சுகாதார மையத்தின் ஆய்வுப்படி 3-ல் 2 குழந்தைகளுக்கு தாய்ப்பால் கொடுக்கப்படுவதில்லை என தெரிய வருகிறது. எனவே பொதுமக்கள் மற்றும் தாய்மார்களிடம் இதுபோன்ற நிகழ்ச்சிகளின் மூலம் விழிப்புணர்வு ஏற்படுத்துவது முக்கியத்துவம் வாய்ந்தது. அதேபோல் நாம் மேற்பார்வை செய்யவேண்டியது கூடுதல் தேவையாக உள்ளது.

வேலூர் ஆஸ்பத்திரியில் நான் உதவி பேராசிரியராக பணியாற்றியபோது அங்கு 60 சதவீத தாய்மார்கள் மட்டுமே குழந்தைகளுக்கு தாய்ப்பால் கொடுத்து வந்தனர். இதையடுத்து அங்கு தாய்ப்பால் கொடுப்பது பற்றி சிறப்பு ஆலோசகரை நியமித்த பிறகு அதன் சதவீதம் 80 முதல் 90 வரை அதிகரித்தது. எனவே பயிற்சி டாக்டர்கள், முதுகலை மருத்துவ மாணவர்கள் என அனைவரும் தாய்ப்பால் குறித்தான விழிப்புணர்வு ஏற்படுத்துவதோடு. அவர்களை மேற்பார்வை செய்ய வேண்டியது நம் கடமையாகும்.

இவ்வாறு அவர் கூறினார்.

நிகழ்ச்சியில் மருத்துவ கல்லூரி இயக்குனர் நாராயணபாபு பேசும்போது, “தாய்ப்பால் குடித்து வளரும் குழந்தைகள் பெற்றோரிடம் கூடுதல் நெருக்கத்தோடும், உடல் ஆரோக்கியத்தோடும் இருப்பதை எனது பயிற்சி காலங்களில் நான் கண்டுள்ளேன். குறைந்த எடையில் பிறந்த குழந்தைகள் தாய்ப்பால் மட்டுமே உட்கொண்டு நல்லமுறையில் உடல்நிலை தேர்ச்சி பெற்றும் வர இயலும். குழந்தைகளுக்கு தாய்ப்பால் கொடுப்பதை ஊக்குவிக்கும் வகையில் தமிழக அரசு பஸ் நிலையங்கள் மற்றும் பல்வேறு இடங்களில் தாய்மார்கள் பாலூட்டும் அறையையும் ஏற்படுத்தி உள்ளது. இது தாய்மார்களுக்கு உதவிகரமாக அமைந்து வருகிறது’ என்றார்.

மேலும் செவிலியர்கள் தாய்ப்பால் குறித்தான விழிப்புணர்வு ஏற்படுத்த ஆஸ்பத்திரி வளாகத்துக்குள் பேரணியும் நடத்தினர். முடிவில் மருத்துவக்கல்வி இயக்குனர் டாக்டர் நாராயணபாபு மற்றும் டீன் டாக்டர் தேரணிராஜன் ஆகியோர் தாய்மார்களுக்கு ஊட்டச்சத்து பெட்டகங்களை வழங்கினர். நிகழ்ச்சியில் குழந்தைகள் நல ஆஸ்பத்திரியின் இயக்குனர் டாக்டர் எழிலரசி மற்றும் குழந்தைகள் நலத்துறை சார்ந்த டாக்டர்கள் கலந்துகொண்டனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *