தாமதமாக வீடு ஒப்படைக்க நிறுவனம் ரூ.5 லட்சம் இழப்பீடு தர உத்தரவு
சென்னை,குறிப்பிட்ட காலத்தில் வீட்டை ஒப்படைக்காமல் தாமதித்த கட்டுமான நிறுவனம், பாதிக்கப்பட்ட இருவருக்கு தலா, 5 லட்சம் ரூபாய் இழப்பீடு அளிக்க வேண்டும் என, ரியல் எஸ்டேட் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.
சென்னை வண்டலுாரை அடுத்த சிறுசேரி கிராமத்தில், ‘பிரயாக்நயா சவுத் புராஜக்ட்ஸ்’ நிறுவனம் அடுக்குமாடி குடியிருப்பு திட்டத்தை செயல்படுத்துகிறது. அதில், சவுமி சாட்டர்ஜி, மபிதா சர்க்கார் ஆகியோர் தனித்தனியாக பணம் செலுத்தி, 2014ல் முன்பதிவு செய்தனர்.
இதைத் தொடர்ந்து, இவர்கள் இருவரும் தனித்தனியாக கட்டுமான நிறுவனத்துடன், 2015ல் ஒப்பந்தம் செய்தனர். இந்த ஒப்பந்தத்தில், 2018 ல் இருவருக்கும் வீடுகளை ஒப்படைப்பதாக கட்டுமான நிறுவனம் உறுதி அளித்தது. ஆனால், மிக தாமதமாக, 2022ல் தான் அந்நிறுவனம் வீடுகளை ஒப்படைத்து உள்ளது.
இதுகுறித்து, பாதிக்கப்பட்ட இருவரம் ரியல் எஸ்டேட் ஆணையத்தில், தனித்தனியாக புகார் அளித்தனர். இது தொடர்பாக விசாரணை நடத்திய, ரியல் எஸ்டேட் ஆணைய விசாரணை அலுவலர் என். உமா மகேஸ்வரி பிறப்பித்த உத்தரவு:
கட்டுமான நிறுவனம் ஒப்பந்தத்தில் குறிப்பிட்டதைவிட, மிக தாமதமாக வீடுகளை ஒப்படைத்துள்ளது உறுதியாகிறது. இதனால், மனுதாரர்கள் இருவரும் இழப்பீடு பெற தகுதி அடைகின்றனர். இவர்கள் இருவருக்கும் தலா, 5 லட்ச ரூபாய் இழப்பீடும், வழக்கு செலவுக்காக, தலா ஒரு லட்ச ரூபாயையும் கட்டுமான நிறுவனம் வழங்க வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.