தாம்பரம் – சிறுசேரி வரை பஸ் வசதி ஐ.டி., பெண் ஊழியர்கள் வலியுறுத்தல்
சோழிங்கநல்லுார், சென்னையின் முக்கிய ஐ.டி., நிறுவனங்கள் கொண்ட பகுதியாக, ஓ.எம்.ஆர்., உள்ளது. இங்கு, துரைப்பாக்கம் முதல் சிறுசேரி வரை, நுாற்றுக்கும் மேற்பட்ட ஐ.டி., நிறுவனங்கள் உள்ளன.
முக்கிய பிரச்னையாக, பொது போக்குவரத்து உள்ளது. இதை கருத்தில் கொண்டு, மெட்ரோ ரயில் திட்ட பணி நடக்கிறது.
ஆனால், மாநகர பேருந்துகளை, மக்களுக்கு சிரமம் ஏற்படுத்தாத வகையில், தொலைநோக்கு பார்வையுடன் இயக்க வேண்டும் என, ஐ.டி., பெண் ஊழியர்களின் கோரிக்கை விடுத்துள்ளனர்.
குறிப்பாக, தாம்பரம், மடிப்பாக்கம், மேடவாக்கம் சுற்றுவட்டார பகுதிகளில் இருந்து, சிறுசேரியில் உள்ள ஐ.டி., நிறுவனங்களுக்கு செல்வோர் அதிகம்.
ஆனால், இவர்கள் தாம்பரத்தில் இருந்து அடையாறு, திருவான்மியூர் நோக்கி செல்லும் பேருந்தில் ஏறி, சோழிங்கநல்லுாரில் இறங்கி, அங்கிருந்து 200 மீட்டர் துாரம் நடந்து சென்று, மற்றொரு பேருந்து பிடித்து சிறுசேரி செல்ல வேண்டியுள்ளது.
மேலும், தாம்பரம், கிளாம்பாக்கத்தில் இருந்து சோழிங்கநல்லுார் வரை, 20, 30 நிமிடங்களுக்கு ஒரு ‘கட் சர்வீஸ்’ பேருந்துகள் இயக்கப்படுகின்றன.
அதில் ஏறினாலும், இரண்டு பேருந்துகள் பிடிக்க வேண்டும். இதனால், தாம்பரம், கிளாம்பாக்கம் வரை இயக்கும் கட் சர்வீஸ் பேருந்துகளை, சிறுசேரி வரை இயக்க வேண்டும் என, கோரிக்கை எழுந்துள்ளது.
அதேபோல், அடையாறு, திருவான்மியூரில் இருந்து, இ.சி.ஆர்., சோழிங்கநல்லுார் வழியாக, தாம்பரம் நோக்கி செல்லும் பேருந்துகளை, கே.கே., சாலையில் இருந்து, நுாறடி சாலை, குமரன் நகர், சோழிங்கநல்லுார் வழியாக இயக்கினால், அதிக மக்கள் பயன் அடைவர்.
இதற்கு ஏற்ப திட்டமிட்டு, மாநகர போக்குவரத்து துறை நடவடிக்கை எடுக்க வேண்டும் என, ஐ.டி., நிறுவன பெண் ஊழியர்கள் வலியுறுத்துகின்றனர்.
பீக் ஹவர்ஸ் நேரத்தில், அனைத்து பேருந்துகளும் நெரிசலில் வருகிறது. இதில், சீண்டல் போன்ற சிரமங்களை அனுபவித்து பணிக்கு செல்கிறோம். அதனால், பணியில் முழு கவனம் செலுத்த முடிவதில்லை. தாம்பரத்தில் இருந்து சோழிங்கநல்லுார் வரை இயக்கும் கட் சர்வீஸ் பேருந்துகளை சிறுசேரி
வரை இயக்கினால், சோர்வு, பிரச்னை இல்லாமல் ஒரே பேருந்தில் பயணிக்க முடியும்.
– ஐ.டி., பெண் ஊழியர்கள்.
கோயம்பேடு, பாரிமுனை, தி.நகரில் இருந்து, சிறுசேரிக்கு நேரடி பேருந்து வசதி உள்ளது. தாம்பரத்தில் இருந்து சோழிங்கநல்லுார் வழியாக, சிறுசேரிக்கு பேருந்து வசதி கேட்டு, ஐ.டி., ஊழியர்கள் தரப்பில் இருந்து கோரிக்கை வந்தது. உயர் அதிகாரிகள் தான், அது தொடர்பாக முடிவு செய்ய வேண்டும்.
– மாநகர போக்குவரத்து துறை அதிகாரிகள்.