மாநகர ‘ஏசி’ பஸ்களில் பயணிக்க ரூ.2,000 புதிய பயண அட்டை எம்.டி.சி ., விரைவில் அறிமுகம்
சென்னை,சென்னை மாநகர போக்குவரத்து கழகம் சார்பில், 650 வழித்தடங்களில், 3,400க்கும் மேற்பட்ட பேருந்துகள் இயக்கப்படுகின்றன. இவற்றில், தினமும் சராசரியாக 30.70 லட்சம் பேர் பயணம் செய்கின்றனர்.
தற்போதுள்ள, 1000 ரூபாய் மாதந்திர பயண அட்டைகளை பயன்படுத்தி, மாநகர ‘ஏசி’ பேருந்துகளில் பயணிக்க முடியாது.
கோடை வெயில் துவங்க உள்ளதால், மாநகர ‘ஏசி’ பேருந்துகளிலும் பயணிக்க வசதியாக, புதிய பயண அட்டை விரைவில் அறிமுகம் செய்யப்பட உள்ளது.
இதுகுறித்து, மாநகர போக்குவரத்து கழக அதிகாரிகள் கூறியதாவது:
சென்னையில், தற்போது 80க்கும் மேற்பட்ட ‘ஏசி’ பேருந்துகள் இயக்கப்படுகின்றன. ‘ஏசி’ பேருந்துகள் தவிர்த்து, இதர பேருந்துகளில் பயணிக்கும் வகையில், 320 முதல் 1,000 ரூபாய் வரையிலான பயண அட்டைகள் வழங்கப்படுகின்றன.
இதில், 1,000 ரூபாய் பயண அட்டையை பெறுவோர், ‘ஏசி’ பேருந்துகளை தவிர, அனைத்து பேருந்துகளிலும் விருப்பம் போல் பயணிக்கலாம்.
இதற்கிடையே, 650 புதிய மின்சார பேருந்துகள் வாங்கப்பட உள்ளன. இதில் 225 ‘ஏசி’ பேருந்துகளும் அடங்கும். கோடை காலம் துவங்கியுள்ளதால், ‘ஏசி’ பேருந்துகளில் பயணிப்போர் எண்ணிக்கை அதிகரிக்கக் கூடும்.
புதிய ஏசி பேருந்துகள், வரும் மே மாதம் முதல் பயன்பாட்டிற்கு வரும். எனவே, ‘ஏசி’ உட்பட அனைத்து மாநகர பேருந்துகளிலும் விருப்பம் போல் பயணிக்கும் வகையில், 2,000 ரூபாய் மதிப்பிலான பயண அட்டை விரைவில் அறிமுகம் செய்யப்பட உள்ளது.
தற்போது, திருப்போரூர், சிறுசேரி டெக் பார்க், கிளாம்பாக்கம் உள்ளிட்ட பகுதிகளில், ‘ஏசி’ பேருந்துகள் அதிக அளவில் இயக்கப்படுகின்றன. புதிய ‘ஏசி’ பேருந்துகள் வந்தவுடன், தேவைக்கேற்ப வழித்தடங்கள் அதிகரிக்கப்படும்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.