அதிகாரிகள் கண்காணிப்பு இல்லாததால் ஆமை வேகத்தில் குடிநீர் திட்ட பணிகள் சோழிங் கநல்லுாரில் கவுன்சிலர்கள் புகார்
சோழிங்கநல்லுார், :சோழிங்கநல்லுார் மண்டல குழு கூட்டம், மண்டல தலைவர் மதியழகன் தலைமையில், நேற்று முன்தினம் நடந்தது
இதில், லியோசுந்தரம், ஏகாம்பரம் உள்ளிட்ட கவுன்சிலர்கள் மற்றும் துறை அதிகாரிகள் பங்கேற்றனர்.
கவுன்சிலர்கள் பேசியதாவது:
ஓ.எம்.ஆர்., குமரன்குடில் நகரில், குடிநீர் திட்டத்தை முதல்வர் துவக்கி வைத்து ஓராண்டு ஆகியும், பணம் செலுத்தியோருக்கு இணைப்பு வழங்கவில்லை.
காரப்பாக்கம், அம்பேத்கர் நகரில் பல ஆண்டுகளாக குடிநீர் இணைப்பு கிடைக்காமல், மக்கள் சிரமப்படுகின்றனர்.
புதிதாக நடைபெறும் குடிநீர், கழிவுநீர் திட்ட பணிகள், அதிகாரிகள் கண்காணிப்பு இல்லாததால் ஆமை வேகத்தில் நடக்கின்றன. ஓ.எம்.ஆரில் போக்குவரத்து நெரிசலுக்கு காரணமான சாலையோர ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும்.
இவ்வாறு அவர்கள் பேசினர்.
இதற்கு, மண்டல குழு தலைவர் மதியழகன், அதிகாரிகளிடம் பேசியதாவது:
குடிநீர் கழிவுநீர், மயானம், பூங்கா உள்ளிட்ட திட்டப் பணிகள், எப்போது பயன்பாட்டுக்கு வரும் என மக்கள் காத்திருக்கின்றனர்.
அவர்களின் எதிர்பார்ப்புக்கு ஏற்ப பணிகளை விரைந்து முடிக்க வேண்டும். இணைப்பு இல்லாத பகுதிகளில், குடிநீர் வழங்குவதை அதிகாரிகள் உறுதி செய்ய வேண்டும்.
இவ்வாறு அவர் பேசினார்.
தொடர்ந்து, சாலை, தெரு விளக்கு சீரமைப்பு, வடிகால், பள்ளி கட்டடம் உள்ளிட்ட, 65 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.