பருத்திப்பட்டு ஏரியில் 10 நாளில் செத்து மிதந்த மீன் 10,000 கிலோ தொடர்ந்து கழிவுநீர் கலப்பதால் நடக்கும் விபரீதம்
ஆவடி : ஆவடி மாநகராட்சிக்கு உட்பட்ட பருத்திப்பட்டு ஏரியில் மீன் செத்து மிதப்பது தொடர்கிறது. பத்து நாட்களில், 10,000 கிலோ மீன் அகற்றப்பட்டு, பள்ளம் தோண்டி புதைக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து கழிவுநீர் கலப்பால், இஷ்டம்போல் கழிவு கொட்டப்படுவதாலும் ஏரியில் மீன்கள் செத்து மிதந்ததாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
ஆவடி மாநகராட்சிக்கு உட்பட்ட பெரியார் நகரில், 87.06 ஏக்கர் பரப்பளவு உடைய பருத்திப்பட்டு ஏரி உள்ளது. நீர்வளத்துறை பராமரிப்பில் உள்ள இந்த ஏரி, 12 முதல் 15 அடி ஆழம் உடையது.
கடந்த 2019ல், 28.16 கோடி ரூபாய் மதிப்பில், சென்னையின் இரண்டாவது பசுமை பூங்காவாக இந்த ஏரி மாற்றப்பட்டது. இங்கு, 3 கி.மீ., சுற்றளவு நடைபாதை, சிறுவர் பூங்கா, படகு குழாம், உடற்பயிற்சி கூடம், திறந்தவெளி கலையரங்கம் உள்ளிட்டவை அமைக்கப்பட்டு உள்ளன.
இந்த ஏரியின் வடக்கு பகுதியில், மாநகராட்சி சார்பில், கழிவுநீரகற்று நிலையம் அமைக்கப்பட்டு உள்ளது.
ஆவடி சுற்று வட்டார பகுதியில் இருந்து பாதாள சாக்கடை இணைப்பு வாயிலாக சேகரிக்கப்படும் கழிவுநீர் சுத்திகரிக்கப்பட்டு, ஏரியில் விடப்படுகிறது. இதனால் ஏரி, அதன் கொள்ளளவான, 36 மில்லியன் கன அடி நீருடன் உள்ளது.
இந்நிலையில், கடந்த 3ம் தேதி, பருத்திப்பட்டு ஏரியில், ஏராளமான, ‘ஜிலேபி’ வகை மீன் செத்து மிதந்து, துர்நாற்றம் வீசியது. செத்து மிதந்த மீன்களை, ஆவடி மாநகராட்சி அதிகாரிகள், மீன்பிடி ஊழியர்கள் வாயிலாக அகற்றினர்.
கடந்த 8ம் தேதி, பருத்திப்பட்டு ஏரியில் மீன்வளத் துறையினர் ஆய்வு மேற்கொண்டனர். செத்து மிதந்த மீன் மாதிரி மற்றும் நீர் மாதிரியை ஆய்வுக்கு எடுத்துச் சென்றனர். அதன் ஆய்வு முடிவுகள் இன்னும் வெளியாகவில்லை.
காரணம் கண்டறியாததால் உரிய நடவடிக்கை எடுக்காததால், 4ம் தேதி முதல் நேற்று வரை, 10,000 கிலோ மீன் இறந்து, ஏரியில் மிதந்தது.
மாநகராட்சியின் மீன்பிடி தொழிலாளர், இறந்த மீன்களை தினமும் அகற்றி, அப்பகுதியில் பள்ளம் தோண்டி புதைத்து வருகின்றனர். மீன்கள் செத்து மிதப்பது தொடரலாம் என்பதால், ஏரி, அதை சுற்றியுள்ள பகுதியில், மாநகராட்சி அதிகாரிகள் சுகாதார நடவடிக்கையை மேற்கொண்டு வருகின்றனர்.
மாநகராட்சி அதிகாரிகள் கூறியதாவது:
பருத்திப்பட்டு ஏரியில் கழிவுநீர் நேரடியாக கலக்கவில்லை. கழிவுநீர் சுத்திகரிக்கப்பட்டு தான் ஏரியில் விடப்படுகிறது. கழிவுநீர் கலப்பதால் மீன் இறக்கவில்லை. நீரின் அளவு குறைவு, ‘ஆக்சிஜன்’ குறைவு காரணமாக இறந்திருக்கலாம்.
மீன்கள் சிறியதாக இருப்பதால், வழக்கமான மீன்பிடி வலையில், அவற்றை பிடிக்க முடியவில்லை என, ஊழியர்கள் தெரிவித்தனர். அதனால், இரு ஆண்டுகளாக ஏரியில் மீன் பிடிக்க ‘டெண்டர்’ விடப்படவில்லை.
நீரில் கார, அமிலத்தன்மை அதிகம் இருந்திருக்கலாம். இதனால், சுவாசிப்பதில் சிரமம் ஏற்பட்டு, மீன்கள் இறந்திருக்க வாய்ப்பு உள்ளது.
இவ்வாறு அவர்கள் கூறினர்.
அப்பகுதிவாசிகள் கூறியதாவது:
சில நாட்களுக்கு முன், அறிவிக்கப்படாத மின் வெட்டு ஏற்பட்டது. அப்போது, கழிவுநீரகற்று சுத்திகரிப்பு நிலையம் இயங்காததால், அதில் இருந்து சுத்திகரிக்கப்படாத கழிவுநீர், ஏரியில் கலந்தது. அதனால், மீன்கள் இறந்திருக்கலாம்.
தவிர, இரு ஆண்டுகளாக மீன் பிடிக்க, ‘டெண்டர்’ விடப்படவில்லை. இப்பகுதி தி.மு.க., பிரமுகர் ஒருவரின் செல்வாக்கில் சிலர், மீன் வளர்த்துப் பிடித்து வந்தனர். அவர்களுக்குள் ஏற்பட்ட போட்டியாலும் இச்சம்பவம் நடந்திருக்கலாம். இதுபோன்ற நிகழ்வுகள் இனி நடக்காத வகையில், மாநகராட்சி உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.
நீர்நிலைகள் மற்றும் கால்வாய்களில் இறைச்சி கழிவு, காலாவதியான உணவு கழிவு, பிளாஸ்டிக், பைக் மெக்கானிக் பயன்படுத்தும் கழிவு எண்ணெய் எல்லாம் தொடர்ச்சியாக கொட்டப்படுகிறது. அதனால், மீன் சுவாசிப்பதில் சிரமம் ஏற்பட்டு இறக்கின்றன. நீர்நிலைகளில் கழிவுநீர் கலப்பதை, மாநகராட்சி தொடர்ச்சியாக கண்காணிக்க வேண்டும். கழிவுநீர் கலப்பால் ஏற்படும் பிரச்னை குறித்து, மாநகராட்சி அதிகாரிகள், வார்டு வாரியாக பொதுமக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்
– ஜெயபால் ரீகன்,
சூழலியல் செயல்பாட்டாளர்.
மீன்வள துறை அறிக்கை
என்ன சொல்கிறது?காலநிலை மாற்றம், ஏரி நீரில் அமிலம், காரத்தன்மை சமமான அளவில் இல்லாதது, பல நாட்களாக மீன் பிடிக்காமல் இருப்பதால், நீரின் அளவை தாண்டி மீன் எண்ணிக்கை அதிகரிப்பது, உயிர் காற்று பற்றாக்குறையால் மீன் இறக்கலாம். கழிவுநீர் கலப்பதால் ஏரி நீரில் உள்ள நுண்ணுயிர் இறந்து, மீன் அதை உட்கொள்வதால் இறக்கலாம் என, பொதுவான காரணத்தை மட்டுமே, மீன்வளத்துறை தெரிவித்துள்ளது. ஆய்வு முடிவு வெளியானால் தான், மீன்கள் செத்து மிதந்தற்கான உண்மை காரணம் தெரிய வரும்.