மீண்டும் மஞ்சப்பை திட்டத்தின் கீழ் சென்னையில் 2ம் கட்டமாக 17 இடங்களில் தானியங்கி துணிப்பை விற்பனை இயந்திரம்: மேயர் பிரியா தகவல்

சென்னை: மீண்டும் மஞ்சப்பை திட்டத்தின் கீழ், 2ம் கட்டமாக 17 இடங்களில் தானியங்கி துணிப்பை விற்பனை இயந்திரம் பொருத்தப்பட்டுள்ளது, என்று மேயர் பிரியா கூறினார். அண்ணாநகர் மண்டலம், 106வது வார்டு, எம்.எம்.டி.ஏ. காலனி பிரதான சாலை, தபால் நிலையம் அருகில் ‘மீண்டும் மஞ்சப்பை’ திட்டத்தின் கீழ், தானியங்கி துணிப்பை விற்பனை இயந்திரத்தை மேயர் பிரியா பயன்பாட்டிற்கு நேற்று திறந்து வைத்தார். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது: தமிழக முதல்வரால், சென்னை மாநகராட்சியில் 2021ம் ஆண்டு ‘மீண்டும் மஞ்சப்பை’ என்ற திட்டம் தொடங்கி வைக்கப்பட்டு செயல்படுத்தப்பட்டு வருகிறது. இதை தொடர்ந்து, சென்னை மாநகராட்சியும், சுற்றுச்சுழல் துறையும் இணைந்து சென்னை மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் பிளாஸ்டிக் பைகளை தவிர்க்குமாறு விழிப்புணர்வு தொடர்ந்து ஏற்படுத்தி வருகிறோம். சென்னை மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் மீண்டும் மஞ்சப்பை என்ற தானியங்கி விற்பனை இயந்திரம் வைத்திருக்கிறோம்.

இதன் மூலமாக, மார்க்கெட் பகுதிகளில் இருக்ககூடிய பொதுமக்களோ, வியாபாரிகளோ, மஞ்சப்பைகளைப் பயன்படுத்திக் கொள்ளலாம். முதற்கட்டமாக சென்னை மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் 25 இயந்திரங்கள் பொறுத்தப்பட்டிருந்தது. இன்றைக்கு 2ம் கட்டமாக 17 இயந்திரங்கள் பொறுத்தப்பட்டு இருக்கிறது. எனவே, பொதுமக்கள் பிளாஸ்டிக் பைக்கு மாற்றாக மஞ்சப்பை பயன்படுத்துவதற்கு தொடர்ந்து விழிப்புணர்வு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. சென்னை மாநகராட்சியின் கடந்த நிதிநிலை அறிக்கையில் 50 ஆயிரம் மஞ்சப் பைகள் வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து, கடந்த 6 மாதத்திலேயே 50 ஆயிரம் மஞ்சப்பைகள் வழங்கப்பட்டுள்ளன. தொடர்ந்து மக்களுக்கு மஞ்சப்பை வழங்குதல் மற்றும் விழிப்புணர்வு ஏற்படுத்துதல் பணி நடைபெற்று வருகிறது.

கடந்த ஒரு ஆண்டில் பிளாஸ்டிக் பைகள் பயன்படுத்தும் விற்பனையாளர்களுக்கு ரூ.ஒரு கோடியே 10 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. மக்கள் பொருட்கள் வாங்க கடைகளுக்குச் செல்லும் போது மஞ்சப்பையை எடுத்து வந்து பயன்படுத்திக் கொள்ள வேண்டும். துணிப்பையானது தொடர்ந்து 15 முறையாவது பயன்படுத்த முடியும். அதே சமயம் பிளாஸ்டிக் பைகள் ஒரு முறை பயன்படுத்தி தூக்கி எறியப்படுகிறது. மேலும் சிலரால் நீர்வழிக் கால்வாய்களில் தூக்கி எறியப்படுகிறது இதன் காரணமாக கால்வாய்களில் வெள்ளநீர் செல்வதற்கு தடை ஏற்படுகிறது.

மேலும் தரையில் வீசப்படும் பிளாஸ்டிக் பைகள் மக்குவதற்கு நீண்ட காலம் பிடிப்பதோடு சுற்றுச்சூழல் பாதிப்பும் ஏற்படுகிறது. எனவே, பொதுமக்கள் விழிப்புணர்வுடன் அடுத்த தலைமுறையினரை காக்கின்ற வகையில் மஞ்சப்பை பயன்பாட்டை மேற்கொள்ள வேண்டும். சென்னை மாநகராட்சியில் வணிக நிறுவனங்கள் உள்ளிட்ட அனைத்து நிறுவனங்களின் விளம்பரப் பலகைகளில் தமிழில் பெயர் வைப்பதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் கூறினார். இந்நிகழ்ச்சியில், அண்ணாநகர் எம்எல்ஏ எம்.கே.மோகன், மத்திய வட்டார துணை ஆணையர் கே.ஜெ.பிரவீன் குமார், மாநகராட்சி ஆளுங்கட்சித் தலைவர் ந.ராமலிங்கம், நிலைக்குழுத் தலைவர்கள் நே.சிற்றரசு, கோ.சாந்தகுமாரி, மண்டலக்குழுத் தலைவர் கூ.பி.ஜெயின், மாமன்ற உறுப்பினர் அதியமான் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *