விளிஞ்சியம்பாக்கம் ஏரி ஆக்கிரமிப்புகள் அகற்ற தீர்ப்பாயம் மூன்று மாதம் கெடு
சென்னை, விளிஞ்சியம்பாக்கம் ஏரியில் அடையாளம் காணப்பட்ட, 234 ஆக்கிரமிப்புகளையும், வரும் ஜூன் 10க்குள் அகற்ற வேண்டும் என, திருவள்ளூர் கலெக்டருக்கு, தென் மண்டல பசுமை தீர்ப்பாயம் உத்தரவிட்டுள்ளது.
சென்னையை அடுத்த ஆவடியில், 100 ஏக்கர் பரப்பளவில் இருந்த விளிஞ்சியம்பாக்கம் ஏரி, ஆக்கிரமிப்புகளால் பாதிக்கும் மேல் சுருங்கிவிட்டது; ஏரிக்குள் கழிவுநீர் விடுவதால் மாசடைந்து உள்ளதாக, நாளிதழ்களில் செய்தி வெளியானது.
அதன் அடிப்படையில், தாமாக முன்வந்து வழக்கு பதிந்து விசாரித்த தீர்ப்பாயம், ஆக்கிரமிப்புகளை அகற்றும்படி, திருவள்ளூர் கலெக்டர், நீர்வளத் துறை உட்பட சம்பந்தப்பட்ட அரசு துறைகளுக்கு உத்தரவிட்டது.
இந்நிலையில், இந்த வழக்கை விசாரித்த, தேசிய பசுமை தீர்ப்பாய தலைவர் நீதிபதி பிரகாஷ் ஸ்ரீவத்சவா, நிபுணர் குழு உறுப்பினர் சத்யகோபால் ஆகியோர் பிறப்பித்த உத்தரவு:
விளிஞ்சியம்பாக்கம் ஏரியில், 234 ஆக்கிரமிப்புகள் அடையாளம் காணப்பட்டு, 30 வணிக நிறுவனங்கள், மூன்று குடியிருப்புகள் அகற்றப்பட்டு உள்ளதாக, திருவள்ளூர் கலெக்டர் தாக்கல் செய்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
மற்ற ஆக்கிரமிப்புகளை அகற்றும் பணிகள் நடந்து வருவதாகவும், அது தொடர்பான விவரங்களை தாக்கல் செய்ய அவகாசம் வேண்டும் என, கலெக்டர் கோரியுள்ளதாக, அரசு வழக்கறிஞர் தெரிவித்தார்.
இந்த வழக்கின் அடுத்த விசாரணை தேதியான வரும் ஜூன் 10க்குள், விளிஞ்சியம்பாக்கம் ஏரி ஆக்கிரமிப்புகளை முழுமையாக அகற்றி, அதன் விவரங்களை தெரிவிக்க வேண்டும்.
இவ்வாறு உத்தரவில் கூறப்பட்டுள்ளது.