மண்டலத்தை பிரிக்க எதிர்ப்பு பதாகைகளுடன் வந்த அதிமுக கவுன்சிலர்கள்: மண்டல கூட்டத்தில் பரபரப்பு
திருவொற்றியூர், மார்ச் 13: மணலி மண்டல குழு மாதாந்திர கூட்டம் தலைவர் ஏ.வி.ஆறுமுகம் தலைமையில் நேற்று நடந்தது. செயற்பொறியாளர் தேவேந்திரன் முன்னிலை வகித்தார். கூட்டத்தில் திமுக, காங்கிரஸ் உள்ளிட்ட கவுன்சிலர்கள், அனைத்து துறை அதிகாரிகள் கலந்து கொண்டனர். அப்போது அதிமுக கவுன்சிலர்கள் முல்லை ராஜேஷ் சேகர், ஸ்ரீதர், ஜெய்சங்கர் ஆகியோர், மணலி மண்டலத்தை பிரித்து மாதவரம் மற்றும் திருவொற்றியூர் மண்டலத்தில் சேர்க்கக்கூடாது.
எப்பொழுதும் போலவே மணலி மண்டலமாக இயங்க வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி கையில் பதாகைகளுடன் கோஷமிட்டபடி மண்டல அலுவலக வாசலுக்கு வந்தனர். பின்னர் பதாகைகளை ஏந்தியபடியே மண்டல குழு கூட்டத்தில் பங்கேற்ற அதிமுக கவுன்சிலர்கள், மணலி மக்களின் கோரிக்கைகளை ஏற்று அரசு மறுபரிசீலனை செய்ய வேண்டும் என கோரினர். இதை தொடர்ந்து கூட்டத்தில் கொண்டுவரப்பட்ட மக்கள் நல பணிகள் மீது விவாதம் நடந்தது. 65 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.