பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி பார்வையற்ற மாணவர்கள், பட்டதாரிகள் உண்ணாவிரதம்
சென்னை, மார்ச் 13: சிறப்பு ஆள்சேர்ப்பு மூலம், பார்வையற்ற மாற்றுத்திறனாளிகளுக்கான 4 சதவீத இடஒதுக்கீட்டு இடங்களை நிரப்புவது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி சென்னையில் பார்வையற்ற கல்லூரி மாணவர்கள் மற்றும் பட்டதாரிகள் நேற்று உண்ணாவிரதம் இருந்தனர். பார்வையற்ற கல்லூரி மாணவர்கள் மற்றும் பட்டதாரிகள் சங்கம் சார்பில் நுங்கம்பாக்கம் வள்ளுவர் கோட்டம் அருகே உண்ணாவிரதம் மற்றும் கவன ஈர்ப்பு போராட்டம் நேற்று நடந்தது.
சங்கத்தின் பொதுச்செயலாளர் ரூபன் முத்து தலைமை வகித்தார். இந்த உண்ணாவிரத போராட்டத்தில் 300க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டனர். அப்போது, சிறப்பு ஆள்சேர்ப்பு மூலம், பார்வையற்ற மாற்றுத்திறனாளிகளுக்கான 4 சதவீத இடஒதுக்கீட்டு இடங்களை நிரப்புவது தொடர்பான அரசாணை நடைமுறைப்படுத்துவது, கல்லூரியில் படிக்கும் பார்வையற்ற மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கு மடிக்கணினி மற்றும் நவீன வாசிக்கும் கருவிகள் வழங்குவது,
அரசு கல்லூரிகள் மற்றும் அரசு உதவி பெறும் கல்லூரிகள் மற்றும் பல்கலைக்கழகங்களில் படிப்போருக்கு சிறப்பு கட்டண விலக்கு, கல்வி கட்டண விலக்கு, தேர்வு கட்டண விலக்கு, அரசு துறைகளில் பதவி உயர்வில் இடஒதுக்கீடு என்பன உள்பட பல்வேறு கோரிக்கைகளை அரசு நிறைவற்ற வேண்டும் என்று வலியுறுத்தினர். காலை 11 மணிக்கு தொடங்கிய இந்த உண்ணாவிரத போராட்டம் மாலை 5 மணி வரை நீடித்தது.