அ.தி.மு.க ., நிர்வாகி மீது தி.மு.க., வினர் தாக்குதல் * பழனிசாமி கண்டனம்
சென்னை:செங்கல்பட்டு அ.தி.மு.க., நிர்வாகி மீதான தாக்குதலுக்கு, அ.தி.மு.க., பொதுச்செயலர் பழனிசாமி கண்டனம் தெரிவித்துள்ளார்.
அவரது அறிக்கை:
செங்கல்பட்டு நகர அ.தி.மு.க., — ஐ.டி., பிரிவு செயலர், வழக்கறிஞர் அனிருதன், நேற்று காலை காரில் செங்கல்பட்டு நீதிமன்றம் செல்லும் வழியில் ராட்டினகிணறு என்ற இடத்தில், தி.மு.க.,வினரால் தாக்கப்பட்டுள்ளார். அவரது காரையும் சேதப்படுத்தியுள்ளனர்.
அங்கே பாதுகாப்பு பணியில் இருந்த காவல் துறையினர் வேடிக்கை பார்த்துள்ளனர். அவ்வழியாகச் சென்ற வாகன ஓட்டிகள் அனிருதனை மீட்டு, செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் சேர்த்துள்ளனர்.
அனிருதன் மீதான தாக்குதலை தடுக்காமல் வேடிக்கை பார்த்த காவல் துறையினருக்கு கண்டனத்தை தெரிவித்துக் கொள்கிறேன். தாக்குதல் நடத்திய தி.மு.க.,வினர் மீது சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.