பொது 3 மாதத்தில் 42 எஸ்கலேட்டர் மெட்ரோ நிர்வாகம் தகவல்
சென்னை, சென்னை மெட்ரோ ரயில் நிலையங்களில், அடுத்த மூன்று மாதங்களில் 42 எஸ்கலேட்டர்கள் பயன்பாட்டிற்கு கொண்டுவரப்பட உள்ளது.
இது குறித்து, சென்னை மெட்ரோ ரயில் நிறுவன அதிகாரிகள் கூறியதாவது:
மெட்ரோ ரயில்களில் பயணியர் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. தற்போது, பெரும்பாலான மெட்ரோ ரயில் நிலையங்களில் ஒரு எஸ்கலேட்டர் மட்டுமே இருக்கிறது.
இதை இரண்டாக அதிகரிக்க உள்ளோம். பயணியர் வருகை அதிகமாக வரும் 30 மெட்ரோ ரயில் நிலையங்களில், 45 கோடி ரூபாய் மதிப்பீட்டில் 42 எஸ்கலேட்டர்கள் அமைக்கும் பணிகள் துவக்கப்பட்டுள்ளன.
கிண்டி, எழும்பூர், திருமங்கலம், அண்ணாநகர், ஆலந்துார், கோயம்பேடு, டி.எம்.எஸ்., நந்தனம் உள்ளிட்ட மெட்ரோ ரயில் நிலையங்களில், எஸ்கலேட்டர்கள் கொண்டுவரப்பட்டு, நிறுவும் பணிகள் 30 சதவீதம் முடிந்துள்ளன. அடுத்த மூன்று மாதங்களில், அனைத்து பணிகளும் முடித்து பயன்பாட்டிற்கு கொண்டுவர உள்ளோம்.
அதுபோல், பயணியர் கூட்டம் அதிகமாக உள்ள மெட்ரோ நிலையங்களில் கூடுதல் ஸ்கேனர்கள், மின் துாக்கிகளும் அமைக்கப்பட்டு வருகின்றன.
இவ்வாறு அவர்கள் கூறினர்.