சென்னை மாநகராட்சியில் பணிபுரியும் ஊழியர்கள், உறுப்பினர்களுக்கு விளையாட்டு போட்டிகள்: அமைச்சர் சேகர்பாபு தொடங்கி வைத்தார்

சென்னை: சென்னை மாநகராட்சியில் பணிபுரியும் அலுவலர்கள், பணியாளர்கள் மற்றும் மாமன்ற உறுப்பினர்களுக்கான விளையாட்டுப் போட்டிகளை அமைச்சர் பி.கே.சேகர்பாபு தொடங்கி வைத்தார். சென்னை மாநகராட்சி அலுவலர்கள், பணியாளர்கள் மற்றும் மாமன்ற உறுப்பினர்களுக்கான விளையாட்டு போட்டிகளை கண்ணப்பர் விளையாட்டுத் திடலில் நேற்று அமைச்சர் பி.கே.சேகரபாபு தொடங்கி வைத்தார். மாநகராட்சியின் கொடியை ஏற்றி வைத்து, விளையாட்டு வீரர்களின் அணி வகுப்பை பார்வையிட்டார். பிறகு ஒலிம்பிக் தீபத்தை ஏற்றி, வண்ண பலூன்களையும், புறாக்களையும் பறக்கவிட்டார். பின்னர் அனைவரும் உறுதிமொழியினை ஏற்றுக் கொண்டனர். இந்த போட்டிகள் நேற்று முதல் வரும் 25ம் தேதி வரை நடைபெற உள்ளது. விளையாட்டுப் போட்டிகளில் பெருநகர சென்னை மாநகராட்சியில் பணிபுரியும் அலுவலர்கள் மற்றும் பணியாளர்களில் 1,756 ஆண்கள், 586 பெண்கள் என 2,342 பேர், 74 மாமன்ற உறுப்பினர்கள் என மொத்தம் 2,416 பேர் பங்கேற்கின்றனர்.

ஜவஹர்லால் நேரு விளையாட்டு அரங்கத்தில் இன்று கேரம் மற்றும் நாளை சதுரங்க ஆட்டம், பூந்தமல்லி நெடுஞ்சாலை-நேரு பூங்காவில் வரும் 13ம் தேதி கால்பந்து, கண்ணப்பர் விளையாட்டு திடலில் வரும் 14ம் தேதி டென்னிகாய்ட், எறிபந்து, கோ-கோ, மந்தைவெளி-அல்போன்சா விளையாட்டுத் திடலில் வரும் 15ம் தேதி டேபிள் டென்னிஸ், கண்ணப்பர் விளையாட்டுத் திடலில் வரும் 17ம் தேதி கைப்பந்து மற்றும் கபடி போட்டிகள், வியாசர்பாடி-முல்லை நகர்-இறகுப்பந்து உள்விளையாட்டு அரங்கில் வரும் 18ம் தேதி இறகுப்பந்து, பூந்தமல்லி நேரு பூங்காவில் வரும் 19ம் தேதி மற்றும் 20ம் தேதி ஆகிய இரண்டு நாட்களுக்கு தடகளப் போட்டிகள், கயிறு இழுத்தல் மற்றும் லக்கி கார்னர் போட்டிகள், மைலேடிஸ் நீச்சல் குளத்தில் வரும் 22ம் தேதி நீச்சல் போட்டி, கண்ணப்பர் விளையாட்டுத் திடலிலும், செனாய் நகர்-கிரெசன்ட் விளையாட்டுத் திடலிலும் வரும் 24ம் மற்றும் 25ம் தேதி ஆகிய இரண்டு நாட்களுக்கு கிரிக்கெட் போட்டிகளும் நடைபெற உள்ளன.

நிகழ்ச்சியில், மேயர் பிரியா, துணை மேயர் மகேஷ்குமார், துணை ஆணையர் பிரதிவிராஜ், வடக்கு வட்டார துணை ஆணையர் கட்டா ரவி தேஜா, நிலைக் குழு தலைவர்கள் பாலவாக்கம் விசுவநாதன், சாந்தகுமாரி, மாமன்ற உறுப்பினர்கள் ஸ்ரீராஜேஸ்வரி, கே.பி.சொக்கலிங்கம், தீர்த்தி, சரவணன், பரிதி இளம்சுருதி, சுப்பிரமணி, துர்கா தேவி, வேளாங்கண்ணி, சரஸ்வதி உள்ளிட்ட மாமன்ற உறுப்பினர்கள், அலுவலர்கள் மற்றும் பணியாளர்கள் கலந்து கொண்டனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *