‘ஆன்லைன்’ மோசடி பேர்வழிகளிடம் மீட்ட ரூ.52.68 லட்சம் முதியவரிடம் ஒப்படைப்பு
சென்னை, சென்னை, அபிராமபுரத்தைச் சேர்ந்த 72 வயது முதியவரின் மொபைல் போன் எண்ணிற்கு, கடந்தாண்டு செப்டம்பரில் வந்த அழைப்பில் பேசிய மர்மநபர், ‘நீங்கள் ஆதார் எண் பயன்படுத்தி, பல வங்கிகளில் கணக்குகள் துவக்கி, உரிய ஆவணங்கள் இல்லாத ‘ஹவாலா’ பண பரிவர்த்தனை செய்து உள்ளீர்கள். மும்பை மற்றும் டில்லி சைபர் கிரைம் போலீசில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. தொலைபேசி இணைப்பை, மும்பை போலீசிற்கு இணைக்கிறோம்’ என்றனர்.
அதில் பேசிய நபர், ‘பெடக்ஸ் கூரியர் வாயிலாக சட்டவிரோதமாக போதை பொருட்கள், போலி பாஸ்போர்ட், 257 ஏ.டி.எம்.,கார்டு, புலித் தோல் ஆகியவை அடங்கிய பார்சல், சுங்கத்துறையினரால் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
எனவே, மும்பை சைபர் கிரைம் காவல் நிலையத்திற்கு, இரண்டு மணி நேரத்தில் வரவேண்டும்; இல்லையேல் கைது செய்வோம்’ என மிரட்டினர்.
மேலும், சட்டவிரோதமாக பணபரிவர்த்தனை நடந்துள்ளதை ஆராய வேண்டும்; வைப்பு தொகையை அனுப்புங்கள்; 30 நிமிடத்தில் தருகிறோம்’ எனக்கூறியுள்ளனர்.
இதை உண்மை என நினைத்து, 4.60 கோடி ரூபாய் அனுப்பி உள்ளார். அதன் பிறகே தான் ஏமாற்றம் அடைந்ததை உணர்ந்தார். இது குறித்து வழக்கு பதிவு செய்த சைபர் கிரைம் போலீசார், அக்., 3ம் தேதி, மஹாராஷ்டிரா, ஆந்திரா உள்ளிட்ட மாநிலங்களைச் சேர்ந்த, 15 பேரை கைது செய்தனர்.
அவர்களிடம் இருந்து பறிமுதல் செய்யப்பட்ட, 52.68 லட்சம் ரூபாய் ஹவாலா பணத்தை, மோசடியில் பணத்தை இழந்த முதியவரிடம், சைபர் கிரைம் போலீசார் ஒப்படைத்தனர்.