சென்னை , காஞ்சி, திருவள்ளூர், செங்கல்பட்டு உள்ளிட்ட மாவட்டங்களில் அரசு நிலங்களில் 10 ஆண்டுக்கு மேல் வசிப்பவர்களுக்கு 6 மாதத்தில் பட்டா: வழிகாட்டு நெறி முறைகளை வெளியிட்டது தமிழக அரசு

சென்னை, மார்ச் 8: சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு உள்ளிட்ட மாவட்டங்களில், அரசு நிலங்களில் 10 ஆண்டுகளுக்கும் மேல் வசிப்பவர்களுக்கு 6 மாதங்களில் பட்டா வழங்க தமிழக அரசு வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிட்டு அரசாணை பிறப்பித்துள்ளது. இதன்மூலம் 86 ஆயிரம் பேர் பயன்பெறுவார்கள். சென்னையை சுற்றியுள்ள 4 மாவட்டங்களில் பெல்ட் ஏரியா எனப்படும் 32 கி.மீ., பகுதிகளில் அரசு புறம்போக்கு நிலத்தில் நீண்ட காலமாக குடியிருப்பவர்கள் மற்றும் இதர மாவட்டங்களில் ஆட்சேபகரமற்ற பகுதிகளில் குடியிருப்பவர்களுக்கு பட்டா வழங்க தமிழக அரசு முடிவு செய்துள்ளது. அதன்படி, சென்னையில் மட்டும் ஆட்சேபனையற்ற புறம்போக்கு பகுதிகளில் 29,187 பேரும், இதர மாவட்டங்களில் 57,084 பேர் என மொத்தம் 86 ஆயிரம் பேருக்கு 6 மாதங்களில் பட்டா வழங்க வேண்டும் என்று கடந்த பிப்ரவரி மாதம் 10ம் தேதி நடைபெற்ற அமைச்சரவை கூட்டத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டு இருந்தார்.

இந்த நிலையில் பட்டா வழங்குவது தொடர்பாக நிலையான வழிகாட்டுதல்களுடன் தமிழக அரசு நேற்று அரசாணை வெளியிட்டது. அதில் கூறியிருப்பதாவது: சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர் மாவட்டங்களில் அரசு புறம்போக்கு நிலங்களில் 10 ஆண்டுகளுக்கும் மேல் வசிப்பவர்கள், இதர மாநகராட்சிகள், நகராட்சிகள், பேரூராட்சிகளில் ஆட்சேபகரமற்ற புறம்போக்கு நிலங்களில் 5 ஆண்டுகளுக்கும் மேலாக வசிப்பவர்களுக்கு பட்டா வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து, மாவட்டங்களில் இருந்து பெறப்பட்ட தரவுகள் ஆய்வு செய்யப்பட்டு அமைச்சரவையில் ஒப்புதல் பெறப்பட்டது. அதன்படி, பட்டா வழங்குவதற்கான வழிகாட்டுதல்கள் நில நிர்வாக ஆணையரால் வெளியிடப்பட்டுள்ளது. அதன்படி சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு மாவட்டங்களில் ஆட்சேபகரமற்ற புறம்போக்கு பகுதிகளில் 10 ஆண்டுகளுக்கு மேல் குடியிருப்போருக்கு ஒருமுறை வரன்முறைப்படுத்தும் திட்டத்தின் கீழ், தளர்வு அளிக்கப்படுகிறது.

இதர மாவட்டங்களில் மாவட்ட தலைநகரங்கள், மாநகராட்சிகள், நகராட்சிகள், பேரூராட்சிகள் மற்றும் அதை அடுத்த 16 அல்லது 8 கி.மீ., சுற்றளவுக்கு ஒரு முறை சிறப்பு வரன்முறைப்படுத்தும் திட்டத்தின் கீழ் 5 ஆண்டுகள் குடியிருப்போருக்கு பட்டா வழங்கலாம். குறிப்பாக கடந்த 2020ம் ஆண்டு வெளியிடப்பட்ட வரன்முறைப்படுத்துவதற்கான அரசாணைப்படி, சென்னை மற்றும் அதன் பெல்ட் பகுதி தவிர்த்த இதர மாநகராட்சிகளில் அரசு நிலம் 15 சென்ட்க்கு அதிகம் இருந்தாலோ, இதர நகராட்சிகள், பேரூராட்சிகளில் 25 சென்ட்க்கு அதிகம் இருந்தாலோ, அந்த நிலம், தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியத்துக்கு வழங்கப்படும். ஆட்சேபகரமற்ற புறம்போக்கு நிலத்தை பொறுத்தவரை, வகைப்படுத்தப்பட்ட, வகைப்படுத்தப்படாத நிலங்கள், கள்ளான் குத்து, பாறை, கரடு, கிராம நத்தம், அரசு நஞ்சை, புஞ்சை மற்றும் இதர ஆட்பேகரமற்ற மாவட்ட தனிப்பட்ட புறம்போக்கு நிலங்களாக இருக்க வேண்டும்.

இதுதவிர, பயன்படுத்தப்படாமலும், எதிர்காலத்தில் உரிய பயன்பாட்டுக்கு தேவைப்படாமலும் இருக்கும் வண்டிப்பாதை, களம், மயானம், தோப்பு உள்ளிட்ட உள்ளாட்சிகளில் உள்ள ஆட்சேபமுள்ள புறம்போக்கு நிலங்களும் இதில் அடங்கும். வரன்முறை திட்டத்தை பொறுத்தவரை, ₹3 லட்சத்துக்கு குறைவாக குடும்ப ஆண்டு வருமானம் பெறுபவர்களுக்கு வரன்முறைப்படுத்தி பட்டா வழங்கப்படுகிறது. அதன்படி, சென்னை, தாம்பரம், ஆவடி மாநகராட்சிகளில் அரசு நிலம் அல்லது ஒரு சென்ட் இவற்றில் எது குறைவாக இருந்தாலும் இலவசமாக வழங்கப்படுகிறது. கூடுதலாக இருந்தால் நிலத்தின் மதிப்புக்கான தொகை பெறப்படுகிறது. இதர மாநகராட்சிகள், நகராட்சிகள், பேரூராட்சிகளில் 2 சென்ட் வரையும், கிராமப்புறங்களில் 3 சென்ட் வரையும் இலவசமாக வழங்கப்படுகிறது. மேலும், ஆண்டு வருமானம் ₹3 லட்சத்துக்கு மேல் இருந்தால் நிலத்துக்கு உரிய தொகை பெறப்படுகிறது. அரசு நிலம், குறிப்பிட்ட 2 சென்ட்அல்லது 3 சென்ட் அளவுக்கு அதிகமாக இருந்தால் அந்நிலம் அரசால் எடுத்துக் கொள்ளப்படும். இதற்காக, மாவட்ட அளவில் மாவட்ட ஆட்சியர் தலைமையிலும், மாநில அளவில் தலைமைச்செயலர் தலைமையிலும் குழு அமைக்கப்பட்டுள்ளது. மாவட்ட ஆட்சியர் தலைமையிலான குழு ₹5 கோடி வரை மதிப்புள்ள நிலங்களுக்கான வரன்முறை பணியையும், மாநில அளவிலான குழு ₹5 கோடி மதிப்புக்கு அதிகமாக உள்ள நிலங்களையும் வரன்முறைப்படுத்தி வழங்குவதற்கான ஒப்புதல்களை வழங்கும். இந்த சிறப்பு வரன்முறைப்படுத்தும் திட்டம் வரும் டிசம்பர் மாதம் வரை அமலில் இருக்கும். இவ்வாறு கூறப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *