₹70 கோடி மதிப்பில் 10 புதிய திட்ட பணிகளுக்கு சென்னை பெருநகர் வளர்ச்சி குழுமத்தின் சார்பில் முதல்வர் அடிக்கல்: ₹40 கோடி செலவில் 3 முடிவுற்ற பணிகளும் திறப்பு

சென்னை, மார்ச் 8: சென்னை தலைமைச்செயலகத்தில் வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித் துறையின் கீழ், சென்னை பெருநகர வளர்ச்சி குழுமத்தின் சார்பில் ₹70 கோடி மதிப்பீட்டில் புதிதாக தொடங்கப்பட உள்ள 10 திட்ட பணிகளுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் அடிக்கல் நாட்டினார். மேலும், ₹40 கோடி செலவில் முடிவுற்ற பணிகளை திறந்து வைத்துள்ளார். சென்னை, போரூர், ராமாபுரத்தில் 16.63 ஏக்கர் பரப்பளவில் ₹15.75 கோடி செலவில் டாக்டர் எம். எஸ். சுவாமிநாதன் ஈரநில பசுமை பூங்கா அமைக்கப்பட்டுள்ளது. இப்பூங்காவில் சதுப்பு நிலம் சார்ந்த உயிரினங்கள் மற்றும் நீர்நிலைகளை பொதுமக்கள் கண்டுகளிக்க 600 மீட்டர் நீளமுள்ள பலகை நடைபாதை அமைக்கப்பட்டுள்ளது.
மேலும், இப்பூங்காவில் விளையாட்டு மைதானங்கள், குழந்தைகளுக்கான விளையாட்டுப் பகுதிகள், இருக்கை வசதிகள், வெளிப்புற உடற்பயிற்சி மையம், கண்காட்சி மேடைகள் என பல்வேறு பொழுதுபோக்கு அம்சங்களும் இடம் பெற்றுள்ளன. ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட செடிகள், மரங்கள், புற்கள் மற்றும் நீர்வாழ் தாவரங்கள் நடப்பட்டுள்ளன.

மேலும், சென்னை, கோயம்பேடு மொத்த விற்பனை அங்காடி வளாகத்தில் 4 கோடி ரூபாய் செலவில் கண்காணிப்பு கட்டுப்பாட்டு அறை, சூரிய மின்சக்தி அமைப்பு உள்ளிட்ட மேம்பாட்டுப் பணிகள்; திருவொற்றியூர், சாத்தாங்காடு இரும்பு மற்றும் எஃகு சந்தை வளாகத்தில் 20 கோடி ரூபாய் செலவில் கண்காணிப்பு கட்டுப்பாட்டு அறை, மின்சார அறை, மின்னணு எடை பாலம், குடிநீர் வடிகால் அமைப்பு உள்ளிட்ட மேம்பாட்டு பணிகள் என மொத்தம் 39.75 கோடி ரூபாய் செலவில் 3 முடிவுற்ற பணிகளை முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்துள்ளார்.

இதுமட்டுமல்லாது, சென்னை, காட்டுப்பாக்கம், இந்திரா நகரில் ₹19.10 கோடி மதிப்பீட்டிலும், சென்னை, போரூர், கணேஷ் நகரில் ₹12.93 கோடி மதிப்பீட்டிலும் கட்டப்படவுள்ள பன்னோக்கு மையங்கள், சென்னை, சேத்துப்பட்டு, அப்பாசாமி தெருவில் ₹1.43 கோடி மதிப்பீட்டில் அமைக்கப்படவுள்ள கால்பந்து மைதானம், குத்தம்பாக்கம், பெங்களூரு – சென்னை தேசிய நெடுஞ்சாலையில் சிட்கோ மற்றும் புதூர்மேடு ஆகிய இடங்களில் ₹1.63 கோடி மதிப்பீட்டில் சாலை சந்திப்புகளை மேம்படுத்தும் பணிகள், குத்தம்பாக்கம், புறநகர் பேருந்து முனையத்தில் எஸ்இடிசி மற்றும் டிஎன்எஸ்டிசி பேருந்துகளுக்கு ₹9.55 கோடி மதிப்பீட்டில் அமைக்கப்படவுள்ள கூடுதல் வாகன நிறுத்துமிடம், சென்னை, சைதாப்பேட்டை, அம்மா பூங்காவை ₹3.65 கோடி மதிப்பீட்டில் மேம்படுத்தும் பணி, எம்.எம்.டி.ஏ. காலனி, அரசு மேல்நிலை பள்ளியில் ₹5 கோடி மதிப்பீட்டில் கூடுதல் வகுப்பறைகள், கே.கே.நகரில் உள்ள சாலை சந்திப்பு மற்றும் சிவன் பூங்காவை ₹4.60 கோடி மதிப்பீட்டில் மேம்படுத்தும் பணி,

தாம்பரம், டாக்டர் ஏ.பி.ஜே.அப்துல் கலாம் பூங்கா மற்றும் நல்லதண்ணீர் குளத்தை ₹5.80 கோடி ரூபாய் மதிப்பீட்டில் மேம்படுத்தும் பணி, அம்பத்தூர் பானு நகரில் ₹7.01 கோடி மதிப்பீட்டில் நவீன வசதிகளுடன் கூடிய விளையாட்டு மைதானம் என மொத்தம் ₹70.70 கோடி மதிப்பீட்டில் 10 புதிய திட்ட பணிகளுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் அடிக்கல் நாட்டி, பணிகளை தொடங்கி வைத்தார். இந்த நிகழ்ச்சியில், இந்து சமயம் மற்றும் அறநிலையத் துறை அமைச்சரும், சென்னைப் பெருநகர் வளர்ச்சிக் குழுமத் தலைவருமான பி.கே.சேகர்பாபு, தலைமைச் செயலாளர் முருகானந்தம், வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித் துறை கூடுதல் தலைமை செயலாளர் காகர்லா உஷா, சென்னை பெருநகர் வளர்ச்சி குழுமத்தின் முதன்மை செயல் அலுவலர் சிவஞானம் ஆகியோர் கலந்து கொண்டனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *