மகளிருக்கு ‘ பிங்க் ‘ பூங்கா உட்பட 71 புதிய திட்டங்கள் தாம்பரம் மாநகராட்சி பட்ஜெட்டில் அறிவிப்பு
தாம்பரம், தாம்பரம் மாநகராட்சி கூட்டம், மேயர் வசந்தகுமாரி தலைமையில் நேற்று காலை நடந்தது. இதில், துணை மேயர் காமராஜ், கமிஷனர் பாலசந்தர், அனைத்து கட்சி கவுசிலர்கள் பங்கேற்றனர்.
கூட்டம் துவங்கியதும், 2025 – 26ம் ஆண்டிற்கான பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது. அதை மேயர் வெளியிட்டார்.
அதில், மொத்த வருவாய் 1,139.30 கோடி ரூபாயாகவும், செலவு 1,088.69 கோடி ரூபாயாகவும், உபரி 50.61 கோடி ரூபாயாகவும் உள்ளது என தெரிவிக்கப்பட்டது. அதே நேரத்தில், இம்மாநகராட்சியில் முதல் முறையாக 71 புதிய அறிவிப்புகள் வெளியிடப்பட்டன.
புதுமையான முறையில் பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டதற்கு, தி.மு.க., மண்டலக்குழு தலைவர்கள் மற்றும் கவுன்சிலர்கள் பாராட்டு தெரிவித்தனர். தொடர்ந்து கூட்டம் நடத்தப்பட்டு, 144 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
பட்ஜெட் தாக்கலுக்கு பின், கவுன்சிலர்கள் பேசியதாவது:
வார்டு 5, அ.தி.மு.க., ஜெகநாதன்: பம்மல், செங்கழுநீர் கல்குட்டையில் தண்ணீரை சுத்திகரிப்பு செய்து, குடிநீராக வழங்கும் பிளான்ட் பொருத்தப்பட்டு உள்ளது. ஆனால்,
ஆறு மாதங்களாக இயங்கவில்லை. இந்த கல் குட்டையில் தேங்கியுள்ள தண்ணீரை திருடி, கலப்பட மணல் கழுவுவதற்கு பயன்படுத்துகின்றனர்.
வார்டு 50, ம.ம.க., யாக்கூப்: ஜி.எஸ்.டி., சாலை விரிவாக்கத்திற்காக பழமையான ஜீவா கட்டடம் இடிக்கப்படவுள்ளதாக தீர்மானம் கொண்டு வரப்பட்டுள்ளது.
அங்குள்ள கடைக்காரர்களுக்கு மாற்று இடம் வழங்கிவிட்டு, கடைகளுக்கான குத்தகை உரிமத்தை ரத்து செய்ய வேண்டும். மேலும், மேற்கு தாம்பரம், ரங்கநாதபுரத்தில் ஆடுத்தொட்டி கட்ட வேண்டும்.
வார்டு 47, அ.தி.மு.க., சாய்கணேஷ்: ஐந்து தெருக்களில் பாதாள சாக்கடை திட்டம் இல்லை. இது தொடர்பாக, பல ஆண்டுகளாக தொடர்ந்து வலியுறுத்தி வருகிறோம். அத்தெருக்களில் இதுவரை பாதாள சாக்கடை குழாய் பதிக்காததற்கு என்ன காரணம்?
வார்டு 45, தி.மு.க., தாமோதரன்: சேலையூரில் அங்கன்வாடிக்கு செல்லும் பாதை ஆக்கிரமிப்பில் உள்ளது. 3 அடி வழி மட்டுமே உள்ளதால், குழந்தைகள் சிரமப்படுகின்றனர். ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும் என மனு கொடுத்தும் நடவடிக்கை இல்லை.
இவ்வாறு கவுன்சிலர்கள் பேசினர்.
தாம்பரம் மாநகராட்சியில் பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டதை அடுத்து, கவுன்சிலர்கள், ஐந்து மண்டலங்களைச் சேர்ந்த அதிகாரிகள், துாய்மை பணியாளர்கள், பத்திரிகையாளர்களுக்கு தடபுடல் சைவ – அசைவ விருந்து அளிக்கப்பட்டன.
மட்டன் பிரியாணி, மட்டன் கிரேவி, சிக்கன் கிரேவி, 65, இறால் தொக்கு, வஞ்சிரம் வறுவல் உள்ளிட்ட அறுசுவை உணவு பரிமாறப்பட்டன.
புதிய அறிவிப்புகளில் சில
மாணவர்களுக்கு ஆங்கில பேச்சு திறன்ஏற்படுத்துதல் குழந்தைகள் பாதுகாப்பு மையம் மனவளர்ச்சி மற்றும் தற்காப்பு பயிற்சி 1 கோடி ரூபாயில் ஸ்மார்ட் வகுப்பறைகள், ரோபோடிக்ஸ் மற்றும் சிறப்பு குழந்தைகளுக்கான வகுப்பறை உயர் கல்விக்காக 3 கோடி ரூபாயில் நவீன படிப்பகம் 3 கோடி ரூபாயில் சோலார் திட்டம் 4 கோடி ரூபாயில் பசுமை புல்வெளி திடல் 3.74 கோடி ரூபாயில் பூங்காக்களில் ஜிம் அதிக வெள்ளம் தேங்கும் இடங்களில் 1 கோடி ரூபாயில் ஸ்பான்ஞ்ச் பூங்கா 5 கோடி ரூபாயில் அலுவலர்களுக்கான ஜிம் 10 கோடி ரூபாயில் பல அடுக்கு வாகன நிறுத்தம் 2 கோடி ரூபாயில் பிராணிகள் எரிவாயு தகனமேடை -5 கோடி ரூபாயில் அறிவியல் ரீதியான பூங்கா: அறிவியல், கணிதத்தை எளிய முறையில் விளக்கும் வகையில் உபகரணங்களுடன் அமைக்கப்படுகிறது. 1 கோடி ரூபாயில் மகளிருக்கான பிங்க் பூங்கா: முழுக்க முழுக்க பெண்கள் மட்டுமே பயன்படுத்தும் வகையில் இப்பூங்கா அமைக்கப்படுகிறது. உடற்பயிற்சி உபகரணங்கள் உள்ளிட்ட வசதிகள் இடம்பெறும்.