கடன் வாங்கி தருவதாக மோசடி: 3 பேர் சிக்கினர்
தண்டையார்பேட்டை, – பழைய வண்ணாரப்பேட்டை, பாலு தெருவை சேர்ந்தவர் ஈஸ்வர், 48. தண்டையார்பேட்டை ஆர்.டி.ஓ., அலுவலகத்தில், இடைத்தரகராக வேலை பார்த்தார். இவருக்கு, 2020ம் ஆண்டு, செங்கல்பட்டு, காட்டாங்குளத்தைச் சேர்ந்த ஆரோக்கிய அலோசியஸ், 38, என்பவர் அறிமுகமாகி உள்ளார்.
ரியல் எஸ்டேட் தொழிலில் முதலீடு செய்வதாக கூறி, ஈஸ்வரிடம் பல தவணைகளாக, 8.5 லட்சம் ரூபாயை, அலோசியஸ் வாங்கியுள்ளார். தொடர்ந்து, ஐந்து கோடி ரூபாய் வங்கி கடன் வாங்கி தருவதாக கூறியவர், புழல் எம்.ஜி.ஆர்., நகரைச் சேர்ந்த கல்பனா 38, கனகராஜ், 39, யோகி ஆகிய மூன்று பேரை அறிமுகம் செய்துள்ளார்.
அவர்கள், முன்பணம் செலுத்தினால்தான், தனியார் வங்கியில் எளிதாக கடன் கிடைக்கும் எனக்கூறி, 2022 – 2023ல், ஈஸ்வரிடமிருந்து, 21 லட்சம் ரூபாய் வாங்கியுள்ளனர். பல மாதங்களாகியும் பணத்தை திருப்பி தரவில்லை; கடனையும் தராமல் அழைக்கழித்து உள்ளனர்.
இதுகுறித்து ஈஸ்வர் அளித்த புகாரில், தண்டையார்பேட்டை போலீசார் வழக்கு பதிந்து, பண மோசடியில் தொடர்புடைய ஆரோக்கிய அலோசியஸ், 38, கல்பனா, 38, கனகராஜ், 39, ஆகிய மூன்று பேரை, நேற்று கைது செய்தனர். விசாரணைக்கு பின் மூவரும், நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைக்கப்பட்டனர். இதில், ஆரோக்கிய அலோசியஸ் மீது, ஏற்கனவே மத்திய குற்றப்பிரிவில் ஒரு வழக்கு உள்ளது.