கிரிக்கெட்டில் ‘பார்ட்னர்ஷிப்’ அசத்திய வால்வரின்ஸ் அணி
சென்னை, சென்னை புளூ ஸ்கை கிரிக்கெட் அகாடமி சார்பில், ஸ்ரீகுரு ராகவேந்திரா சாமி லீக் மற்றும் நாக் அவுட் கோப்பைக்கான கிரிக்கெட் போட்டிகள் நடக்கின்றன.
பல்வேறு மண்டலங்களில், தலா ஒன்பது அணிகள் பங்கேற்று, ஒவ்வொரு அணிகளும் எட்டு போட்டிகள் வீதம், ‘லீக்’ முறையில் மோதி வருகின்றன. இதில், ‘கே’ மண்டல முதல் அரையிறுதி போட்டி, சேத்துப்பட்டு எம்.சி.சி., பள்ளியில் நடந்தது.
‘டாஸ்’ வென்ற, வால்வாரின்ஸ் சி.சி., அணி, பந்து வீச்சை தேர்வு செய்தது. முதலில் பேட்டிங் செய்த, மார்சன்ஸ் யுனைடெட், 19.3 ஓவர்களில், ஆல் அவுட் ஆகி, 119 ரன்களை அடித்தது.
அடுத்து களமிறங்கிய வால்வாரின்ஸ் அணியின் வீரர்கள் தாரீக், கிருபா இருவரின் பாட்னர்ஷிப்பில் ஆட்டம் விறுவிறுப்பாக சென்றது. போட்டியின் முடிவில், ஒரு விக்கெட் கூட இழக்காமல், 10.4 ஓவர்களில், 122 ரன்களை அடித்து, இருவரே ஆட்டத்தை முடித்தனர்.
தாரீக், 27 பந்துகளில் ஒரு சிக்சர், ஒன்பது பவண்டரியுடன் ஆட்டமிழக்காமல், 50 ரன்களை எடுத்தார். கிருபாவும் ஆட்டமிழக்காமல், 37 பந்துகளில் ஒரு சிக்சர், 10 பவுண்டரியுடன், 62 ரன்களை எடுத்து வெற்றிக்கு கைகொடுத்தனர். போட்டியில், ‘ஒயிடு, நோ பாலில்’ கூடுதலாக பத்து ரன்கள் கிடைத்தது.
இந்த வெற்றியால், இந்த மண்டலத்தில் முதல் அணியாக இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றது.