இரண்டு மாடுகளுக்குள் சண்டை விலக்கியவருக்கு ‘மாவுக்கட்டு’
அடையாறு, அடையாறு, கெனால் பேங்க் சாலையை சேர்ந்தவர் சிவகுமார், 48; பெயின்டர். நேற்று முன்தினம் இரவு, இவரது வீட்டு முன், இரண்டு மாடுகள் சண்டை போட்டுக் கொண்டிருந்தன.
அவற்றை, சத்தம் போட்டு துரத்தியும் அவை அங்கிருந்து செல்லாமல், சண்டையை தொடர்ந்தன. அதனால், அவற்றின் அருகில் சென்று விரட்ட முயன்றார்.
அப்போது, ஒரு மாடு ஆக்ரோஷமாக சிவகுமாரை முட்டித் தள்ளியது. இதில், அவரது வலது கையில் எலும்பு முறிவும், உடலில் காயமும் ஏற்பட்டது.
பக்கத்தில் வசிக்கும் அவரது சகோதரர் மணிகண்டன், அருகில் உள்ள ஒரு மருத்துவமனைக்கு அழைத்து சென்றார். அங்கு, முதலுதவி சிகிச்சை அளித்து, ஸ்டான்லி மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு, சிவகுமார் கையில் மாவுக்கட்டு போடப்பட்டது.
அடையாறு போலீசார், மாட்டின் உரிமையாளர் யார் என, விசாரிக்கின்றனர்.