கே. கே. நகரில் ஆக்கிரமிப்பு அகற்றம் லாரியை சிறைபிடித்த வியாபாரிகள்
கே.கே.நகர், கோடம்பாக்கம் மண்டலம், கே.கே.நகர்- ஆற்காடு சாலையை இணைக்கும் பிரதான சாலையாக, ராஜமன்னார் சாலை உள்ளது. ஆற்காடு சாலையில் மெட்ரோ பணிகள் நடப்பதால், தினமும் பல்லாயிரக்கணக்கான வாகனங்கள் ராஜமன்னார் சாலையை பயன்படுத்தி வருகின்றன.
இச்சாலையின் ஒருபுறம், புதிதாக மழைநீர் வடிகால் அமைக்கப்பட்டது. சாலை விரிவாக்கத்திற்காக அம்மா உணவகம், கழிப்பறை, காரிய மேடை உள்ளிட்டவை இடிக்கப்பட்டன.
தற்போது, சாலை விரிவாக்கம் செய்யப்பட்ட பகுதியில், வாகனங்கள் மற்றும் தள்ளுவண்டி கடைகள் வரிசையாக ஆக்கிரமித்து நிறுத்தப்பட்டுள்ளன. இதனால், சாலை மீண்டும் குறுகலாகி, காலை மற்றும் மாலை வேளைகளில் நெரிசல் நிலவி வந்தது
இது குறித்து நம் நாளிதழில் கடந்தாண்டு செய்தி வெளியானது. இந்நிலையில், உதவி செயற்பொறியாளர் ராஜு மற்றும் உதவி பொறியாளர் கவிதா தலைமையிலான அதிகாரிகள், ஆக்கிரமிப்பு கடைகளை அகற்றும் பணியில் நேற்று ஈடுபட்டனர்.
இதில், ராஜமன்னார் சாலையில் உள்ள 15க்கும் மேற்பட்ட டிபன், சூப், பீப் பக்கோடா உள்ளிட்ட தள்ளுவண்டி கடைகள் அகற்றப்பட்டன.
இதற்கு, தள்ளுவண்டி வியாபாரிகள் எதிர்ப்பு தெரிவித்து, மாநகராட்சி லாரியை சிறை பிடித்தனர். இதனால் அப்பகுதியில் சலசலப்பு ஏற்பட்டது. தகவல் அறிந்து கே.கே., நகர் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்தனர். அவர்களது பாதுகாப்புடன் ஆக்கிரமிப்புகள் தொடர்ந்து அகற்றப்பட்டன.