பூந்தமல்லி மெட்ரோ தடத்தில் நிலையங்கள் பணி தீவிரம்
சென்னை, சென்னையில் இரண்டாம் கட்ட மெட்ரோ ரயில் திட்டத்தில் ஒரு பகுதியாக, கலங்கரை விளக்கம்- – பூந்தமல்லி பைபாஸ் தடத்தில், மெட்ரோ ரயில் பணிகள் நடந்து வருகின்றன.
கலங்கரை விளக்கம் முதல் கோடம்பாக்கம் மேம்பாலம் வரை சுரங்கப்பாதையாகவும், கோடம்பாக்கம் பவர்ஹவுஸ் முதல் பூந்தமல்லி பைபாஸ் வரை மேம்பால பாதையாகவும் அமைகிறது.
இதில், ஒன்பது சுரங்க மெட்ரோ ரயில் நிலையங்களும், 18 மேம்பால மெட்ரோ ரயில் நிலையங்களும் இடம்பெற உள்ளன.
இது குறித்து, சென்னை மெட்ரோ ரயில் நிறுவன அதிகாரிகள் கூறியதாவது:
பூந்தமல்லி — போரூர் இடையே 9 கி.மீ., துாரத்தில் பூந்தமல்லி பைபாஸ், முல்லைதோட்டம், கரையான்சாவடி, குமணஞ்சாவடி, காட்டுப்பாக்கம் உட்பட ஒன்பது மெட்ரோ ரயில் நிலையங்கள் அமைகின்றன.
பயணியர் வந்து செல்ல வசதியாக, அனைத்து அடிப்படை வசதிகளும் இருக்கும். இந்த ரயில் நிலையங்களில் 40 லிப்ட்களும், 60 எஸ்கலேட்டர்களும் வாங்கப்பட்டு, ரயில் நிலையங்களில் நிறுவும் பணிகளை மேற்கொண்டு வருகிறோம்.
அடுத்த ஆறு மாதங்களில், இந்த பணிகளை முடிக்க திட்டமிட்டுள்ளோம். இரண்டாம் கட்ட மெட்ரோ திட்டத்தில், பூந்தமல்லி பைபாஸ் – போரூர் இடையே, முதலில் மெட்ரோ ரயில் சேவை துவங்கும் என எதிர்பார்க்கிறோம்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.