₹20 ஆயிரம் தர மறுத்ததால் தாய் வீட்டை தீவைத்து எரித்த மகன் கைது

பெரம்பூர், மார்ச் 4: குடும்ப செலவுக்கு ₹20 ஆயிரம் கொடுக்க மறுத்ததால் தாயின் வீட்டை தீவைத்து எரித்த மகனை போலீசார் கைது செய்தனர். கொளத்தூர் ஹரிதாஸ் 2வது தெருவை சேர்ந்தவர் யோகேஸ்வரன் (51). இவர் எழும்பூர் நீதிமன்றத்தில் வழக்கறிஞர். இவரது மனைவி சரஸ்வதி (45). இவரது முதல் கணவர் பாலு இறந்து விட்டார். சரஸ்வதியின் மகன் கரண் (எ) தினேஷ், அரும்பாக்கம் என்.எஸ்.கே நகர் பகுதியில் மனைவி ரஞ்சிதாவுடன் வசித்து வருகிறார்.
இந்த நிலையில், குடும்ப தேவைக்காக சில நாட்களுக்கு முன்பு தினேஷ், தாய் சரஸ்வதியிடம் ₹20 ஆயிரம் கேட்டுள்ளார். அதற்கு சரஸ்வதி, ‘தற்போது என்னிடம் பணம் இல்லை’ என கூறியதாக தெரிகிறது. இதனால், கடும் ஆத்திரமடைந்த தினேஷ் தாயுடன் தகராறில் ஈடுபட்டுள்ளார்.

இந்நிலையில், நேற்று முன்தினம் இரவு 10 மணி அளவில், பாட்டிலில் மண்ணெண்ணெய் கலந்த பெட்ரோலை ஊற்றிக் கொண்டு கொளத்தூரில் உள்ள தாய் வீட்டுக்கு வந்த தினேஷ், அந்த பாட்டிலை வீட்டு வாசலில் அடித்து உடைத்தபோது கதவின் மீது பட்டு தீப்பிடித்து எரிந்துள்ளது. சத்தம் கேட்டு வீட்டில் இருந்தவர்கள் ஓடி வந்து தீயை அணைத்துள்ளனர். அப்போது தினேஷ், அங்கு நிறுத்தப்பட்டிருந்த கார் கண்ணாடிகளையும் அடித்து உடைத்து, காரையும் பெட்ரோல் ஊற்றி எரிக்க முயன்றுள்ளார். அவரை அக்கம் பக்கத்தினர் தடுத்து நிறுத்தினர். தகவலறிந்த கொளத்தூர் சரக உதவி கமிஷனர் செந்தில்குமார், இன்ஸ்பெக்டர் விவேகானந்தர் ஆகியோர் போலீசாருடன் வந்து, தினேஷை கைது செய்தனர். விசாரணைக்கு பிறகு அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *