துாய்மை பணியாளர் மர்ம மரணம் டோல்கேட் மேலாளர் மீது வழக்கு
செங்கல்பட்டு, செங்கல்பட்டு அடுத்த புலிப்பாக்கம் பகுதியைச் சேர்ந்தவர் குப்புசாமி, 64. பரனுார் சுங்கச்சாவடியில் கடந்த 10 ஆண்டுகளாக துாய்மை பணியாளராக பணிபுரிந்து வருகிறார்.
கடந்த 22ம் தேதி குப்புசாமிக்கும் சுங்கச்சாவடி நிர்வாகத்திற்கும் இடையே கருத்து வேறுபாடு காரணமாக, பணியில் இருந்து நீக்கியதாக கூறப்படுகிறது.
இருப்பினும், 23ம் தேதி பணி கேட்டு சென்ற குப்புசாமியை, சுங்கச்சாவடி மேலாளர் மோகித் திருப்பி அனுப்பியுள்ளார். மறுநாளும் சென்றும், அங்கிருந்தோர் திருப்பி அனுப்பியுள்ளனர்.
ஆனால், அங்கிருந்து செல்ல மறுத்து, ஊழியர்கள் தங்கும் அறையில் படுத்து உறங்கியுள்ளார். இதைக் கண்ட சுங்கச்சாவடி ஊழியர்கள், குப்புசாமியை சுங்கச்சாவடி அருகில் உள்ள மரத்தடிக்கு துாக்கிச் சென்று படுக்க வைத்தனர்.
தகவலறிந்து வந்த குப்புசாமியின் உறவினர்கள், அவரை மீட்டு, செங்கல்பட்டில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர். மேல் சிகிச்சைக்கு, செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட குப்புசாமி, நேற்று முன்தினம் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
சுங்கச்சாவடி நிர்வாகம் முறையாக முதலுதவி அளிக்காததால் குப்புசாமி உயிரிழந்ததாக, அவரது உறவினர்கள் செங்கல்பட்டு தாலுகா காவல் நிலையத்தில் புகார் அளித்தனர்.
இது குறித்து சுங்கச்சாவடி மேலாளர்கள் மோகித் மற்றும் பழனியப்பன் உள்ளிட்டோர் மீது, போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரிக்கின்றனர்.