போதை நபரால் கோர விபத்து ஒருவர் பலி; மற்றொருவர் ‘சீரியஸ்’
திருவண்ணாமலை மாவட்டம், பெரியகரத்தைச் சேர்ந்தவர் குப்புசாமி, 39; கால்டாக்சி ஓட்டுநர். இவர் சென்னையில் பணிபுரிந்து வருகிறார்.
நேற்று முன்தினம் நள்ளிரவு 11:30 மணியளவில், வண்டலுார்- — கேளம்பாக்கம் பிரதான சாலையில், கொளப்பாக்கம் அருகே, சாலையோர உணவு கடையில் சாப்பிட்டு கொண்டிருந்தார்.
அப்போது, கேளம்பாக்கத்தில் இருந்து வண்டலுார் நோக்கி வந்த இன்னோவா கார், அவர் மீது மோதியது. இதில், சம்பவ இடத்திலேயே குப்புசாமி பலியானார். இந்த விபத்தில், கடை ஊழியர் பிரவீன், 19, படுகாயமடைந்தார்.
இருவர் மீதும் மோதிவிட்டு நிற்காமல் சென்ற காரை, வண்டலுார் ஜி.எஸ்.டி., சாலை சந்திப்பில், வாகன சோதனையில் ஈடுபட்டிருந்த போலீசார் மடக்கினர். அப்போது, கார் ஓட்டுநர் அதீத மது போதையில் இருப்பதும், மேற்கு தாம்பரம், கோகுல் நகரைச் சேர்ந்த செல்வகுமார், 42, என்பதும் தெரிய வந்தது. இதையடுத்து, செல்வகுமாரை கைது செய்த போலீசார், அவர் மீது வழக்கு பதிவு செய்தனர்.
விபத்தில் இறந்த குப்புசாமி உடலை கைப்பற்றி, பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். படுகாயமடைந்த பிரவீன் குரோம்பேட்டை அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு, பின், மேல் சிகிச்சைக்காக ராஜிவ்காந்தி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் சலசலப்பை ஏற்படுத்தி உள்ளது.