ரவுடியை தீர்த்துக்கட்டி ‘ரீல்ஸ்’ 6 பேர் கும்பல் பிடிபட்டது
அண்ணா நகர், கிழக்கு அண்ணா நகர், அன்னை சத்யா நகரைச் சேர்ந்தவர் ராபர்ட், 28. இவரை, நேற்று முன்தினம் மாலை, மர்ம நபர்கள் சரமாரியாக வெட்டிக் கொலை செய்தனர். அதே கும்பல், சில மணிநேரத்திற்கு முன், அயனாவரம் பச்சைக்கல் வீராசாமி குடியிருப்பில், 17 வயது சிறுவனை தேடி சென்றுள்ளது. வீட்டில் சிறுவன் இல்லாததால், அவரது தாய் ரேவதியை, 32, வெட்டி தப்பியுள்ளது.
அவர், தலையில் 10 தையல்களுடன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இதுகுறித்து, தனிப்படை போலீசார் விசாரித்து வருகின்றனர். முன் விரோதம் காரணமாக, 2019ல் ராபர்ட் கூட்டாளி கோகுலை, லோகு கும்பல் கொலை செய்தது
இது தொடர்பாக, ராபர்ட், லோகு இடையே மோதல் இருந்தது வந்தது. லோகுவின் செயல்பாடுகள் குறித்து, ரேவதியின் 17 வயது மகன், போலீசுக்கு தகவல் கொடுத்து வந்துள்ளார். இதனால் ராபர்ட், ரேவதியின் மகன் என இருவரையும் ஒரே நேரத்தில் தீர்த்து கட்ட, திட்டமிட்டது தெரிய வந்தது.
இந்நிலையில், கொலையில் தொடர்புடையோர் பகையை தீர்த்த சந்தோஷத்தில், கூட்டாளிகளுடன் சேர்ந்து, இன்ஸ்டாகிராமில் ‘ரீல்ஸ்’ வீடியோ வெளியிட்டு கொண்டாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். கொலையாளிகள் குறித்து அயனாவரம் போலீசார் தனிப்படை அமைத்து விசாரித்தனர்.
அவர்கள், அயனாவரம், பச்சைக்கல் வீராசாமி குடியிருப்பைச் சேர்ந்த லோகு என்ற யோகராஜ், 36, மோகன்லால், 23, சிலம்பரசன், 23, வெங்கடேசன், 29, தீபக், 21, முகப்பேர் கிழக்கு பகுதியைச் சேர்ந்த சங்கர் பாய், 29, என தெரிய வந்தது. ஆகிய ஆறு பேரையும் நேற்று மாலை கைது செய்த அயனாவரம் இன்ஸ்பெக்டர் பரணிதரன் தலைமையிலான போலீசார்,அண்ணா நகர் போலீசிடம் ஒப்படைத்தனர்.