மக்கள் கட்டிய கோவில் மண்டபத்திற்கு சொந்தம் கொண்டாடும் அறநிலைய துறை
அனகாபுத்துார், அனகாபுத்துாரில், பழமைவாய்ந்த ஆலவட்டம்மன் கோவில் உள்ளது. ஹிந்து அறநிலையத் துறை கட்டுப்பாட்டில் உள்ள இக்கோவிலில், முகப்பு மண்டபம் கட்டப்பட்டு, சமீபத்தில் அமைச்சர் அன்பரசன் திறந்து வைத்தார்.
இந்த முகப்பு மண்டபத்தில், அதற்கான கல்வெட்டு பதிக்கப்பட்டு உள்ளது. அதில், ஹிந்து அறநிலையத் துறையால் நிதி ஒதுக்கீடு செய்து கட்டப்பட்டதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்நிலையில், மக்களிடம் வசூலிக்கப்பட்ட பணத்தில் முகப்பு மண்டபத்தை கட்டிவிட்டு, ஹிந்து அறநிலையத் துறையால் கட்டப்பட்டது போல் கல்வெட்டு பதிக்கப்பட்டதையும், அதில், ஊர் முக்கியஸ்தர்களின் பெயர் இடம் பெறாததை கண்டித்தும், அனைத்து கட்சி மற்றும் அனகாபுத்துார் பகுதிவாசிகள் சார்பில், நேற்று கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது.
அனகாபுத்துார் நுாலகம் அருகே, செங்கல்பட்டு மாவட்ட தே.மு.தி.க., செயலர் முருகேசன் தலைமையில் நடந்த ஆர்ப்பாட்டத்தில், முன்னாள் பல்லாவரம் அ.தி.மு.க., – எம்.எல்.ஏ., தன்சிங் உள்ளிட்ட அக்கட்சியினர் மற்றும் அப்பகுதிவாசிகள், 100க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்.
ஆடி மாத திருவிழாவின் போது, பொதுமக்கள் கொடுத்த நன்கொடை மற்றும் பலரின் பொருள் உதவியால் கோவில் முகப்பு மண்டபம் கட்டப்பட்டுள்ளது.
ஆனால், ஹிந்து அறநிலையத் துறையால் மண்டபம் கட்டப்பட்டதாக கல்வெட்டு பதிக்கப்பட்டுள்ளதை கண்டித்தும், அதில், ஊர் முக்கியஸ்தர்களின் பெயர் போடாததை கண்டித்தும், கோஷம் எழுப்பினர்.
பொய்யான கல்வெட்டை அகற்றிவிட்டு, பொதுமக்கள் பெயர் கொண்ட புதிய கல்வெட்டு பதிக்க வேண்டும் என்றும் ஆர்ப்பாட்டத்தில் வலியுறுத்தப்பட்டது.