மெரினா , பெசன்ட் நகர் கடற்கரைகள் பராமரிப்பு தனியாரிடம் ஒப்படைப்பு தொழில் உரிம கட்டணம் குறைப்பு; மாநகராட்சி கூட்டத்தில் முடிவு

சென்னை, ன்னை மாநகராட்சி ரிப்பன் மாளிகையில், மாதந்திர கவுன்சில் கூட்டம், மேயர் பிரியா தலைமையில் நடந்தது. துணை மேயர் மகேஷ்குமார், கமிஷனர் குமரகுருபரன, பல்வேறு துறை அதிகாரிகள், கவுன்சிலர்கள் பங்கேற்றனர்.

கூட்டம் துவங்கி ஒன்றரை மணி நேரமாகியும், பெரும்பாலான இருக்கைகள் காலியாகவே இருந்தன. அவ்வாறு கூட்டத்திற்கு வந்தவர்களும், அவர்களுக்கு வழங்கப்படும், டீ, போண்டா, பஜ்ஜி சாப்பிட சென்று விட்டனர்.

அதனால், எண்ணக்கூடிய அளவில் கவுன்சிலர்கள் இருந்ததால், ‘கூட்டம் துவங்கும் நேரத்தில் அனைத்து கவுன்சிலர்களும் அரங்கிற்குள் இருக்க வேண்டும். கூட்டம் நடக்கும்போது அடிக்கடி வெளியே செல்வதையும் தவிர்க்க வேண்டும்,’ என, மேயர் பிரியா, துணை மேயர் மகேஷ்குமார் ஆகியோர் வலியுறுத்தினர்.

பின், சென்னை மணலியில் மாநகராட்சிக்கு சொந்தமான பயோ காஸ் வெடித்து சிதறியதில் ஆப்பரேட்டர்ஒருவர் உயிரிழந்தது, ஒருவர் படுகாயம் அடைந்தது குறித்து, காங்கிரஸ் கவுன்சிலர் தீர்த்தி கேள்வி எழுப்பினார்.

அதற்கு, மாநகராட்சி கமிஷனர் குமரகுருபரன் அளித்த பதிலில், ”பயோ காஸ் விபத்து குறித்து தணிக்கை செய்ய குழு அமைக்கப்பட்டுள்ளது. ஒரு வாரத்தில் அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டப்பின், நடவடிக்கை எடுக்கப்படும்,” என்றார்.

கடற்கரைகள் பராமரிப்பு

பின், மாநகராட்சி மன்ற கூட்டத்தில், 117 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. அதில் சில முக்கிய தீர்மானங்கள்:

 சென்னை மெரினா கடற்கரை, 7.10 கோடி ரூபாயில் செலவில், ஒரு ஆண்டு கால பராமரிப்புக்கு தனியார்வசம் ஒப்படைக்கப்படும்

 பட்டினப்பாக்கம், திருவான்மியூர், பெசன்ட் நகர், புது கடற்கரைகள்,4.55 கோடி ரூபாய் மதிப்பில் ஓராண்டு பராமரிப்புக்கு தனியார்வசம் ஒப்படைக்கப்படும்

 சென்னையில், 190 இயற்கை உரம் தயாரிக்கும் கூடங்கள் அமைக்கப்பட்டுள்ளன. இவை, மயான பூமி, பொதுமக்கள் கூடும் இடங்களில் அதிகம் இருப்பதால், 168 கூடங்கள் மூடப்படுகின்றன

 மாநகராட்சியில் மழைநீர் வடிகால்கள் துார்வாரும் பணிக்கான இயந்திரம் கொள்முதலுக்கு, ஒரு வட்டாரத்திற்கு 10 கோடி என, 30 கோடி ரூபாய் வழங்கப்படு

 தொழில் உரிம கட்டணத்தை குறைக்கும்படி, வணிகர் சங்க பேரமைப்பு கோரிக்கை வைத்தது. அதை ஏற்று, 1,000 சதுர அடிக்குள், 3,500 ரூபாய் வசூல் செய்யப்பட்டதை இரண்டு பிரிவாக பிரித்து, 500 சதுர அடிக்குள், 1,200 ரூபாயாக நிர்ணயம் செய்யப்பட்டு, தொழில் உரிமம் குறைக்கப்பட்டுள்ளது

 மாநகராட்சியில், 127 வணிக வளாகங்களில், 5,914 கடைகள் உள்ளன. இவற்றில், 180 கோடி ரூபாய் மாத வாடகை வசூலிக்கப்படுகிறது. தற்கான குத்தகை காலம், ஒன்பது ஆண்டுகளில் இருந்து, 12 ஆண்டுகளாக உயர்த்தப்பட்டுள்ளது

மேலும், ஒவ்வொரு மாதமும், 5ம் தேதிக்குள் வாடகை செலுத்த தவறினால், 12 சதவீதம் தனி வட்டி என்ற அடிப்படையில் அபராதம் வசூலிக்கப்படும். மேலும், வாடகை கட்டண உயர்வு 15 சதவீதத்தில் இருந்து, 5 சதவீதமாக குறைக்கப்பட்டுள்ளது

 நடிகர் எஸ்.வி.சேகரின் தந்தை, எஸ்.வி.வெங்கட்ராமன் பெயரை, மந்தைவெளிப்பாக்கம், 5வது குறுக்கு தெருவிற்கு சூட்ட அனுமதிக்கப்படுகிறது

 சென்னையில், இளஞ்சிறார்களுக்கான ஆரம்ப நிலை பயிற்சி மையங்களுக்கு, 1.83 கோடி ரூபாய் ஒதுக்க நிர்வாக அனுமதி வழங்கப்பட்டு உள்ளது.

இவ்வாறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டு உள்ளன.

குப்பையை படம் பிடியுங்க!

நம்ம சென்னை செயலியில், குப்பை இருக்கும் இடங்களை படம் எடுத்து, பொதுமக்கள் மட்டுமல்ல, கவுன்சிலர்களும் மாநகராட்சிக்கு அனுப்பலாம். உடனடியாக குப்பை அகற்றப்பட்டு, புகார் அளித்தவர்களுக்கு தெரிவிக்கப்படும்.

– ஜெ.குமரகுருபரன், மாநகராட்சி கமிஷனர்.

டாக்டர்கள் பற்றாக்குறை

துணை மேயர் மகேஷ்குமார் பேசுகையில், ”பல்வேறு துறைகளில் மாநகராட்சி கமிஷனர் சீர்திருத்தம் செய்து வருகிறார். அதுபோல், சுகாதாரத்துறை மீதும் கவனம் செலுத்த வேண்டும். மாநகராட்சி மருத்துவமனைகளில் உள்ள காலி பணியிடங்களை நிரப்ப வேண்டும்,” என்றார்.நிலைக்குழு தலைவர்தனசேகரன் பேசுகையில், ”சாலையோர வியாபாரிகள் உரிமம் பெறுவதையும் எளிமைப்படுத்த வேண்டும்,” என்றார்.

ரூ.1,488.50 கோடி கடன்!

சென்னை மாநகராட்சிக்கு எவ்வளவு கடன் உள்ளது என, பா.ஜ., கவுன்சிலர் உமா ஆனந்தன் கேள்வி எழுப்பினார். அதற்கு, மேயர் பிரியா அளித்த பதில்:சென்னை மாநகராட்சிக்கு, 3,065.65 கோடி ரூபாய் கடன் இருந்தது. அதில், 1,577.10 கோடி ரூபாய் செலுத்தப்பட்டுள்ளது. மீதம், 1,488.50 கோடி ரூபாய் நிலுவையில் உள்ளது. இந்த கடனுக்காக வட்டி மட்டும் ஆண்டுக்கு, 8.5 கோடி ரூபாய் செலுத்தப்பட்டு வருகிறது. ஒவ்வொரு காலாண்டுக்கு ஒருமுறை அசல் செலுத்தப்படுகிறது.இவ்வாறு அவர் கூறினார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *