வைரஸ் தொற்று காரணமாக உடலுறுப்புகள் செயலிழந்த வாலிபருக்கு நவீன சிகிச்சை: காவேரி மருத்துவமனை அசத்தல்
சென்னை, பிப்.28: செயலிழந்த உறுப்புகள், இதயக் கோளாறுடன் அனுமதிக்கப்பட்ட 25 வயது இளைஞருக்கு காவேரி மருத்துவமனை வெற்றிகரமான சிகிச்சை அளித்துள்ளது. வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்ட இளைஞர் வேறொரு மருத்துவமனையில் தீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை பெற்று வந்தார். அங்கு தொடர் சிகிச்சை பெற்று வரும் போது முக்கிய உறுப்புகளும் ஒன்றன்பின் ஒன்றாக செயலிழக்கத் தொடங்கின. இந்த நிலையில் அந்த நோயாளி காவேரி மருத்துவமனைக்கு மாற்றப்பட்டார்.
காவேரி மருத்துவமனையில் பிரத்யேகமான தீவிர சிகிச்சையைத் தொடர்ந்து ஒரே வாரத்தில் அவரது செயலிழந்து உறுப்புகள் மீண்டும் உயிர் பெற்றன. ஒரு மாத காலத்தில் அவருடைய உடல்நிலை முழுவதுமாக முன்னேறியது. அதைத்தொடர்ந்து ஆரோக்கியமான மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார். இது தொடர்பாக மருத்துவர் வெற்றிச்செல்வன் கூறியதாவது: குணமடையாத காய்ச்சல் காரணமாக மருத்துவமனையில் இந்த இளைஞர் அனுமதிக்கப்பட்டுள்ளார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை தேவைப்பட்டுள்ளது.
ஆனாலும் அவரது உள்ளுறுப்புகள் செயலிழக்கத் தொடங்கியுள்ளன. இருமுறை இதய துடிப்பு நின்றுள்ளது. அவரது உடல்நிலை மிகவும் கவலைக்கிடமாகியது. அதனைத் தொடர்ந்து உயிருக்கு உத்தரவாதம் இல்லாத ஆபத்தான நிலையில் நோயாளி காவேரி மருத்துவமனைக்கு வந்தார். அனுபவமும், பயிற்சியும் மிக்க அவசர மருத்துவ பிரிவு பணியாளர்கள் உதவியால், அனைத்து உயிர்காக்கும் வசதிகளும் உள்ள ஆம்புலன்ஸ் வாகனத்தில் நோயாளி கொண்டுவரப்பட்டார்.
இங்கு அவருடைய நின்றுபோன நுரையீரல், சிறுநீரகம், பலவீனமான இதயம் மற்றும் பிற உறுப்புகளின் பணிகளை செயற்கையாக வழங்கி வந்தோம். இதில் டயாலிசிஸ்ஸும் அடங்கும். சுவாசம் தொடர்ந்து நடைபெற தொண்டையில் இருந்து நேரடியாக நுரையீரலுக்கு காற்றை கொண்டு செல்லும் ட்ரக்கியோஸ்டோமி அறுவை சிகிச்சையும் வழங்கப்பட்டது. இம்முயற்சிகளால் நோயாளியின் உடல்நிலையில் ஒரே வாரத்தில் நல்ல மாற்றங்கள் ஏற்பட்டது. ஒரு மாத தீவிர சிகிச்சைக்குப் பிறகு அவர் மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார். இவ்வாறு அவர் கூறினார்.